உழவர் கடன் அட்டைக்கு விண்ணப்பிக்க தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களி்ல் சிறப்பு முகாம் - கலெக்டர் ஆசியா மரியம் தகவல்


உழவர் கடன் அட்டைக்கு விண்ணப்பிக்க தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களி்ல் சிறப்பு முகாம் - கலெக்டர் ஆசியா மரியம் தகவல்
x
தினத்தந்தி 30 July 2019 11:55 PM GMT (Updated: 2019-07-31T05:25:37+05:30)

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் உழவர் கடன் அட்டைக்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம் நடைபெற்று வருவதாக கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார்.

நாமக்கல்,

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் உழவர் கடன் அட்டைக்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம் நடைபெற்று வருவதாக கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்தார். மேலும் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விவசாய பணிகளில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் நிதி தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்யும் நோக்கில் வங்கிகள் மூலம் உழவர் கடன் அட்டைகள் (கிசான் கிரெடிட் கார்டு) வழங்கப்படுகின்றன. இந்த அட்டையானது அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.

இந்த அட்டைகளை விவசாயிகள் பயிர் சாகுபடி செய்வதற்காகவும், கால்நடை மற்றும் மீன் வளர்ப்புக்காகவும் பெற்றுக் கொள்ளலாம். பயிர் சாகுபடியை பொறுத்தவரை சாகுபடியின் பரப்பளவுக்கு ஏற்றவாறும், கால்நடை வளர்ப்பை பொறுத்தவரை நடப்பு மூலதனத்தின் அளவிலும் கடன் அட்டைகள் வழங்கப்படுகின்றன.

இத்திட்டத்தின் மூலம் விவசாயி ஒருவர், எந்த ஈட்டுறுதியும் இல்லாமல் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரையிலும், நில ஈட்டுறுதி அடிப்படையில் ரூ.3 லட்சம் வரையிலும் கடன் பெறலாம். இந்த அட்டை செல்லுபடியாகும் கால அளவு 5 ஆண்டுகள் ஆகும். விண்ணப்பித்த 2 வாரத்திற்குள் கடன் அட்டை வழங்கப்படும். எனவே, அனைத்து விவசாயிகளும் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், நில ஆவணங்களுடன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது கூட்டுறவு வங்கிகளை நேரில் அணுகலாம்.

உழவர் கடன் அட்டைக்கு விண்ணப்பிக்க, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஆகஸ்டு மாதம் இறுதி வரை மாவட்டம் முழுவதும் இம் முகாம்கள் நடைபெற உள்ளது. இம்முகாம்களில் வங்கிகள் பங்கேற்புடன், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை ஆகிய துறை அலுவலர்களும் பங்கேற்க உள்ளனர். விவசாயிகள் நேரடியாகவும், வங்கிகளிலும் உழவர் கடன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்களை அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story