ஆச்சாம்பட்டியில் அபாய நிலையில் அய்யனார் அணைக்கட்டு மதகுகள் சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை


ஆச்சாம்பட்டியில் அபாய நிலையில் அய்யனார் அணைக்கட்டு மதகுகள் சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 7 Aug 2019 10:45 PM GMT (Updated: 7 Aug 2019 8:25 PM GMT)

ஆச்சாம்பட்டியில் அபாய நிலையில் உள்ள அய்யனார் அணைக்கட்டு மதகுகளை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியத்தில் கல்லணை அமைந்து உள்ளது. காவிரி, கொள்ளிடம், புது ஆறு, வெண்ணாறு ஆகிய ஆறுகள் பூதலூர் ஒன்றியம் வழியாக செல்கின்றன. ஆனாலும் பூதலூர் ஒன்றியத்தின் ஒரு பகுதியான செங்கிப்பட்டி வானம் பார்த்த பூமியாக உள்ளது. இங்கு மழை பெய்து ஏரிகள் நிரம்பினால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும்.

செங்கிப்பட்டி பகுதியில் உய்யக்குண்டான் நீட்டிப்பு கால்வாய், புதிய மேட்டு கட்டளை கால்வாய் ஆகிய 2 கால்வாய்கள் உள்ளன. மேட்டூர் அணை நிரம்பினால் மட்டுமே இந்த 2 கால்வாய்களுக்கும் தண்ணீர் வந்து, ஏரிகள் நிரம்பும். 2 கால்வாய்களுக்கும் திறந்து விடப்படும் தண்ணீர், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியத்தில் உள்ள மிகப்பெரிய ஏரிகளுக்கு சென்று அதன் பின்னரே கால்வாய்களை வந்தடைகின்றன.

அய்யனார் அணைக்கட்டு

இது ஒருபுறம் இருக்க புதுக்கோட்டை-தஞ்சை மாவட்ட எல்லையில் ஆச்சாம்பட்டி கிராமத்தில் உள்ள அய்யனார் அணைக்கட்டு பராமரிப்பின்றி கிடப்பது விவசாயிகளை வேதனை அடைய செய்துள்ளது. பட்டுக்கோட்டை பொதுப்பணித்துறை அக்னியாறு வடிநில கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அய்யனார் அணைக்கட்டு, மதகு முழுவதும் மழை நீரை மட்டுமே நம்பி உள்ள அணைக்கட்டாகும். இந்த அணைக்கட்டின் வடக்கு பகுதியில் மட்டும் கரை உள்ளது. இங்கு அணைக்கட்டின் மதகுகள் உள்ளன. அணையின் மற்ற பகுதிகள் இயற்கையாகவே மேடாக உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்யும் மழைநீர் முழுவதும் இந்த அணைக்கட்டுக்கு வந்து சேர்ந்து அணை நிரம்பும் வகையில் இயற்கையான கட்டமைப்பு உள்ளது. மழை பெய்து இந்த அணைக்கட்டில் தண்ணீர் நிரம்பினால் ஆச்சாம்பட்டி, செங்கிப்பட்டி பகுதி கிராமங்களில் ஒரு போக நெல் சாகுபடி செய்ய இயலும். கடந்த பல ஆண்டுகளாக மழை இல்லாததால் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது ஆச்சாம்பட்டி அய்யனார் அணைக்கட்டு.

தட்டுப்பாடின்றி குடிநீர்

அணைக்கட்டில் அமைக்கப்பட்டுள்ள மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேறினால் அந்த தண்ணீர் செங்கிப்பட்டி, கரியபட்டி, ராயராம்பட்டி, புங்கனூர், அய்யனாபுரம் வழியாக சென்று காட்டாறு மூலமாக வெண்ணாற்றுக்கு சென்று விடும். அணைக்கட்டில் தண்ணீரை தேக்கினால் இந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, குடிநீ்ர் தட்டுப்பாடின்றி கிடைக்க வழி ஏற்படும். இதுபோன்ற பல வழிகளில் பயனுள்ள அய்யனார் அணைக்கட்டின் தற்போதைய நிலை பரிதாபமாக உள்ளது.

இதன் மதகுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதுதொடர்பாக எச்சரிக்கை விடுக்கும் வாசகங்கள் மதகு பாலத்தில் எழுதப்பட்டுள்ளது. 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட அய்யனார் அணைக்கட்டை ஆழப்படுத்தி மழைநீரை தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஆச்சாம்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

ஆழப்படுத்த வேண்டும்

ஆச்சாம்பட்டி அய்யனார் அணைக்கட்டை ஆழப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பட்டுக்கோட்டையை தலைமையிடமாக கொண்ட அக்னி ஆறு வடிநில கோட்டத்தின்கீழ் இந்த அணைக்கட்டு உள்ளதால் நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுகிறார்கள். இந்த ஆண்டில் ஆச்சான் குளத்தை சீரமைப்பதாக கூறினார்கள். ஆனால் அதில் உள்ள முட்செடிகளை கூட அகற்றவில்லை.

எம்.ஜி.ஆர். காலத்தில் அமைக்கப்பட்ட அய்யனார் அணைக்கட்டின் மதகுகளை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாாறு விவசாயிகள் கூறினர்.

Next Story