தேசிய கல்வி கொள்கை என்ற பெயரில் குலக்கல்வி முறையை அமல்படுத்த திட்டம் முத்தரசன் பேட்டி


தேசிய கல்வி கொள்கை என்ற பெயரில் குலக்கல்வி முறையை அமல்படுத்த திட்டம் முத்தரசன் பேட்டி
x
தினத்தந்தி 12 Aug 2019 11:15 PM GMT (Updated: 12 Aug 2019 4:53 PM GMT)

தேசிய கல்வி கொள்கை என்ற பெயரில் குலக்கல்வி முறையை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டியளித்தார்.

பெரம்பலூர்,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று பெரம்பலூர் வந்தார். பின்னர் அவர் அரசு போக்குவரத்து ஊழியர் குடியிருப்பில் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்றும் மருத்துவ சீட் கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி கீர்த்தனாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு மிகப்பலத்தோடு பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. இந்த பலத்தை ஜனநாயகத்துக்கு விரோதமாக பயன்படுத்துகிறது. 35 நாட்கள் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அரசியல் அமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவை ரத்து செய்து காஷ்மீர் மாநிலத்தை பிரித்திருப்பது உள்பட 32 மசோதாக்களை அவசர அவசரமாக நிறைவேற்றி உள்ளனர். மழையால் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் சேதம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் தமிழக முதல்- அமைச்சர் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை வன்மையாக கண்டிக்கிறேன். டெல்டா மாவட்டங்களில் குடிமராமத்து பணிக்கு ஒதுக்கிய நிதியில் ஏற்கனவே பணி நடைபெறவில்லை. தற்போதுதான் பணியை தொடங்கி உள்ளனர். மேட்டூர் அணையிலிருந்து நாளை (அதாவது இன்று) தண்ணீர் திறந்துவிடப்பட உள்ள நிலையில் இப்பணிகள் நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ‘நீட்’ தேர்வு முறையால் மனம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இதுவரை 7 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது வேதனையளிக்கிறது. ‘நீட்’ தேர்வு முறையால் தற்கொலை செய்து கொண்டவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணமும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.

‘நீட்’ தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தியும் மத்திய, மாநில அரசுகள் செவிசாய்க்கவில்லை. அதனால் இப்பிரச்சினை குறித்து தற்போது போராட்டம் நடத்தவில்லை. மத்திய அரசு தேசிய கல்வி கொள்கை என்ற பெயரில் குலக்கல்வி முறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. தமிழக அரசால் நடத்தப்படும் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று தேர்வெழுதிய 19 ஆயிரம் பேரில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. தனியார் பயிற்சி மையங்களில் படித்தவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். அமைச்சர் மணிகண்டன், அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணத்தை, முதல்- அமைச்சர் மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story