பா.ஜனதா-ஆர்.எஸ்.எஸ்.காரர்களை கவர்னராக நியமிக்கிறார்கள் - நாராயணசாமி குற்றச்சாட்டு


பா.ஜனதா-ஆர்.எஸ்.எஸ்.காரர்களை கவர்னராக நியமிக்கிறார்கள் - நாராயணசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 2 Sep 2019 11:30 PM GMT (Updated: 2 Sep 2019 8:02 PM GMT)

பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ்.காரர்களை கவர்னராக நியமிக்கிறார்கள் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.

புதுச்சேரி,

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முதல்-அமைச்சர் நாராயணசாமி மணக்குள விநாயகர் கோவிலில் சாமிதரிசனம் செய்தார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒரு மாநில கவர்னராக இருப்பவர் அரசியல் கட்சியை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடாது என்று சர்க்காரியா கமிஷன் தெளிவாக கூறியுள்ளது. இந்தநிலையில் தெலுங்கானா மாநில கவர்னராக பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோதும் சிலரை கவர்னராக நியமித்தோம். ஆனால் இப்போது மத்திய அரசு அப்பட்டமாக பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளை கவர்னர்களாக நியமித்து வருகிறது.

இது ஜனநாயகத்துக்கும் அரசியல் சாசனத்துக்கும் எதிரானது. இப்படி நியமித்தால் மத்திய அரசின் கைப்பாவையாக கவர்னர்கள் செயல்படுவார்கள். இப்படி செய்யக்கூடாது என்றுதான் சர்க்காரியா கமிஷன் கூறியுள்ளது.

இருந்தபோதிலும் தெலுங்கானா கவர்னராக பொறுப்பேற்க உள்ள தமிழிசை சவுந்தரராஜனுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Next Story