கல்லால் தாக்கி மனைவி கொலை மதுபோதையில் தீர்த்து கட்டிய வியாபாரி கைது


கல்லால் தாக்கி மனைவி கொலை மதுபோதையில் தீர்த்து கட்டிய வியாபாரி கைது
x
தினத்தந்தி 21 Sep 2019 11:15 PM GMT (Updated: 21 Sep 2019 7:57 PM GMT)

கன்னியாகுமரியில் மதுபோதையில் கல்லால் தாக்கி மனைவி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வியாபாரியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி, சிலுவைநகர் பகுதியை சேர்ந்தவர் மரிய டெல்லஸ் (வயது 42). இவர் கன்னியாகுமரி கடற்கரையில் ஊசி, மாலை, சீப்பு போன்ற பொருட்களை கைகளில் ஏந்திய படி விற்பனை செய்து வருகிறார். இவருடைய மனைவி அருள் சுனிதா (37). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவரும் அருகில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.

மரிய டெல்லசுக்கு மதுகுடிக்கும் பழக்கம் உண்டு. அடிக்கடி மதுபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இவ்வாறு தகராறு நடைபெறும் போதெல்லாம் உறவினர்கள் அவர்களை சமாதானம் செய்து வந்ததாக தெரிகிறது.

கல்லால் அடித்து கொலை

நேற்று அதிகாலையில் மரிய டெல்லஸ் வழக்கம் போல் வியாபாரத்துக்கு சென்றார். வியாபாரம் முடிந்து காலை 10 மணியளவில் அதிக மது போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். தொடர்ந்து மனைவி அருள் சுனிதாவிடம் வாய் தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றிய நிலையில் மனைவியை சரமாரியாக அடிக்க தொடங்கியதாக தெரிகிறது.

இதனால், வலி தாங்க முடியாமல் அருள் சுனிதா வீட்டை விட்டு வெளியே ஓடினார். ஆனால், மரிய டெல்லஸ் விடாமல் அவரை துரத்தி சென்றார். திடீரென கீழே கிடந்த கல்லை எடுத்து மனைவியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அருள் சுனிதாவின் தலை மற்றும் உடலின் பல இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து அலறி துடித்தார். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அருள் சுனிதா பரிதாபமாக இறந்தார்.

கைது

இதுகுறித்து தகவல் அறிந்த கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பரசு, காந்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இந்த கொலை தொடர்பாக கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மரிய டெல்லசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மது போதையில் வியாபாரி மனைவியை அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மனைவியை தாக்கியதால் ஏற்கனவே சிறைக்கு சென்றவர்

மரிய டெல்லஸ் மதுபோதையில் மனைவியிடம் தகராறு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மனைவியை கல்லால் தாக்கினார். இதில் காயமடைந்த அருள் சுனிதா ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மரிய டெல்லசை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த அவர் போலீஸ் நிலையத்தில் ‘மனைவியிடம் இனிமேல் தகராறு செய்ய மாட்டேன்’ என எழுதி கொடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story