கர்நாடகத்தில் மஞ்சள் ‘அலர்ட்’ நீடிக்கும் நிலையில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்


கர்நாடகத்தில் மஞ்சள் ‘அலர்ட்’ நீடிக்கும் நிலையில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 26 Sept 2019 3:59 AM IST (Updated: 26 Sept 2019 3:59 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் மஞ்சள் ‘அலர்ட்‘ நீடிக்கும் நிலையில் இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) இடி-மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு உள்பட கர்நாடகம் முழுவதும் வருகிற 27-ந் தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி நேற்று முன்தினம் முதல் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. பெங்களூரு புறநகர், கோலார், ராமநகர், துமகூரு, பாகல்கோட்டை, ராய்ச்சூர், பல்லாரி, யாதகிரி ஆகிய மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது.

பெங்களூரு நகரில் நேற்று எலகங்கா, ஹெப்பால், மல்லேசுவரம், சதாசிவநகர், ஒயிட்பீல்டு உள்பட மேலும் சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. விட்டு விட்டு மழை பெய்து வருவதால் சாலைகளில் புதிதாக பள்ளங்கள் உருவாகி உள்ளன. இந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கி சிறு சிறு குட்டை போன்று காட்சியளிக்கின்றன.

இதேபோல் ராய்ச்சூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. ராய்ச்சூர் மாவட்டம் மான்வி டவுன் முஷ்டூரு மேம்பாலம், லிங்கசூகூர் டவுனில் உள்ள உப்பார் நந்திஹாலா மேம்பாலம் ஆகியவை மழை தண்ணீரில் மூழ்கின. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராய்ச்சூர் டவுன் சியாதலாப், ஸ்ரீராமா காலனிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூர் தாலுகா பங்காரா கேம்ப் பகுதியில் உள்ள பள்ளிக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் நேற்று பள்ளி மாணவ-மாணவிகள் தண்ணீர் தேங்கிய வகுப்பறையில் அமர்ந்து பாடங்கள் படித்தனர்.

விஜயாப்புரா மாவட்டம் குடகி கிராமத்தில் ரெயில்வே மேம்பாலத்தின் அடியில் மழைநீர் தேங்கியது. இதனால் அரசு பஸ் உள்பட வாகனங்கள் மழை நீரில் சிக்கி கொண்டன. கோலார், துமகூரு ஆகிய மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாமல் இருந்தது. தற்போது மழை பெய்து வருவதால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் மாநிலத்தில் அதிகபட்சமாக ராய்ச்சூரில் 11 செ.மீட்டர் மழையும், தர்மசாலாவில் 7 செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. பெங்களூருவை பொறுத்தமட்டில் ஆனேக்கல், எசரகட்டா பகுதியில் 1 செ.மீட்டர் மழையும், பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் 3 செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

27-ந் தேதி(நாளை) காலை 8.30 மணி வரை பெங்களூரு, பெங்களூரு புறநகர், துமகூரு, ராமநகர், கோலார், மைசூரு, மண்டியா, குடகு, ஹாசன், சிக்கமகளூரு, சிக்பள்ளாப்பூர், சாம்ராஜ்நகர், பீதர், தார்வார், கதக், ஹாவேரி, கலபுரகி, கொப்பல், ராய்ச்சூர், விஜயாப்புரா, யாதகிரி, உடுப்பி, தட்சிண கன்னடா, உத்தர கன்னடா ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் ‘அலர்ட்‘ விடுக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் இன்று(வியாழக்கிழமை), நாளை(வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் இடி-மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று நேற்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


Next Story