ஆசிரியை வீட்டில் 75 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் கொள்ளை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது கொள்ளையர்கள் கைவரிசை


ஆசிரியை வீட்டில் 75 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் கொள்ளை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது கொள்ளையர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 29 Sep 2019 11:15 PM GMT (Updated: 29 Sep 2019 7:16 PM GMT)

மதுராந்தகம் அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 75 பவுன் நகை ரூ.50 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கருங்குழி பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் லூர்து டேவிட். தாம்பரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அந்தோணியம்மாள் (வயது 50). இவர் மதுராந்தகம் அடுத்த ஒழவெட்டி அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர்.

நேற்று இரவு லூர்துடேவிட் வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் அந்தோணியம்மாள் வீட்டை பூட்டி விட்டு, தனது மகன் மற்றும் மகளுடன் தூங்க சென்றுவிட்டார்.

அப்போது மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து, பீரோவை உடைத்து அதிலிருந்த 75 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

வேலைக்கு சென்று விட்டு, மறுநாள் அதிகாலை லூர்துடேவிட் வீட்டுக்கு வந்து பார்த்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, மனைவி அந்தோணியம்மாள் மற்றும் குழந்தைகள் அயர்ந்து தூங்கி கொண்டிருப்பது தெரிய வந்தது. அவர்களை எழுப்பி கேட்டபோது, கதவு உடைக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மதுராந்தகம் போலீசிடம் லூர்து டேவிட் புகார் அளித்தார். புகாரின் பேரில், மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விசாரணை நடத்தினர்.

மேலும், காஞ்சீபுரத்திலிருந்து மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஆசிரியர் வீட்டில் நள்ளிரவில் கொள்ளையர்கள் வீடு புகுந்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்பகுதிகளில் கொள்ளையர்கள் வீடு புகுந்து திருடும் சம்பவம் அடிக்கடி நடைபெறுவதால் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story