தி.மு.க. ஆட்சியில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் பதுக்கலா? லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரியில் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு


தி.மு.க. ஆட்சியில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் பதுக்கலா? லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரியில் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு
x
தினத்தந்தி 14 Oct 2019 4:30 AM IST (Updated: 14 Oct 2019 5:00 AM IST)
t-max-icont-min-icon

மு.க.ஸ்டாலின் லண்டன் செல்வது பற்றி விளக்கம் அளிக்க வேண்டும். தி.மு.க. ஆட்சியில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் அங்குள்ள வங்கிகளில் பதுக்கப்பட்டு உள்ளதா? என்று நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பரபரப்பாக பேசினார்.

நெல்லை,

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலையில் பிரசாரம் செய்தார்.

அவர் தனது பிரசாரத்தை ரெட்டியார்பட்டியில் இருந்து தொடங்கினார். தொடர்ந்து மூலைக்கரைப்பட்டி, காரியாண்டி, பரப்பாடி, நாங்குநேரி ஆகிய பகுதிகளுக்கு திறந்த வேனில் சென்று இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்.

அப்போது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

நடைபெற உள்ள நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் எதற்காக வந்து இருக்கிறது என்று உங்களுக்கு தெரியும். இந்த தொகுதியில் தேர்தல் திணிக்கப்பட்டு உள்ளது. கடந்த முறை இந்த தொகுதியில் போட்டியிட்ட வசந்தகுமார், பதவி சுகத்துக்கு ஆசைப்பட்டு கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்றதால் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்து உள்ளது.

5 ஆண்டுகள் பணி செய்வார், தங்கள் பிரச்சினை தீரும் என்ற நம்பிக்கையில் மக்கள் வாக்களித்தீர்கள். ஆனால், அவர் சொந்த நலனை கருதி இந்த தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டார். உங்களை ஏமாற்றிய காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தல் மூலம் தக்க பாடம் புகட்டுங்கள்.

ஆனால், அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் ரெட்டியார்பட்டி நாராயணன் நல்லவர். ஆளும்கட்சிக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்தால் உங்கள் தொகுதி பிரச்சினை தீருவதற்கு வாய்ப்பு உண்டு. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ரூபி மனோகரன் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர். சென்னையில் வசித்து வருகிறார். பெரிய கோடீஸ்வரர். அவர் வெற்றி பெற்றால் அவரை நீங்கள் சந்திக்கக்கூட முடியாது.

ஆனால் ரெட்டியார்பட்டி நாராயணன் தனது ஊர் பெயரை தனது பெயரின் முன் வைத்து உள்ளார். தற்போது என்னை எடப்பாடி பழனிசாமி என்று கூட அழைப்பதில்லை. எடப்பாடியார் என்று தான் அழைக்கிறார்கள். அதுபோல நாராயணனை ரெட்டியார்பட்டியார் என்று அழைப்பார்கள்.

மு.க.ஸ்டாலினுக்கு தேர்தல் என்றாலே திண்ணை பிரசாரம் தான் ஞாபகத்துக்கு வரும். அவர் ஒரு கிராமத்தில் பெட்சீட் விரித்து உட்கார்ந்து விடுவார். பொதுமக்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களிடம் குறைகள் கேட்பார். கோரிக்கை மனுக்கள் பெறுவார். நான் கேட்கிறேன், இந்த கோரிக்கை மனுக்களை வாங்கி என்னச் செய்யப்போகிறார். யாரிடம் இந்த மனுக்களை கொடுப்பார். இந்த மனுக்கள் எல்லாம் குப்பைத் தொட்டிக்கு தான் போய் சேரும். எப்படி பொதுமக்களை ஏமாற்றுகிறார் என்று பாருங்கள்.

மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர். துணை முதல்-அமைச்சராக பொறுப்பு வகித்தவர். அப்போது எல்லாம் இவர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கவில்லை. எதிர்க்கட்சியாக இருக்கும்போது தான் மக்களின் ஞாபகம் அவருக்கு வருகிறது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றி ஓட்டு வாங்கிவிட்டனர். பொய் வாக்குறுதிகளை கொடுத்து பிழைப்பு நடத்தும் கூட்டம் தி.மு.க. தான்.

மக்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் கொடுப்போம் என்று வாக்குறுதி கொடுத்தார். எப்படி கொடுக்க முடியும். ஊழலுக்காக ஆட்சியை இழந்த ஒரே கட்சி தி.மு.க. தான்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் லட்சக்கணக்கில் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று சொன்னார்கள். ஆனால் வெறும் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார்கள். வேலூரில் உள்ள 3 சட்டசபை தொகுதிகளில் அதிக அளவில் அ.தி.மு.க.வுக்கு ஓட்டு கிடைத்து உள்ளது. மக்கள் உண்மையை புரிந்து கொண்டு வாக்கு அளித்தனர்.

தி.மு.க. ஆட்சி காலத்தில் தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு திட்டத்தை அவசர அவசரமாக தொடங்கினார்கள். ஆனால் அந்த திட்டத்திற்கு நிலங்களை கையகப்படுத்தவில்லை. அ.தி.மு.க. ஆட்சி வந்த உடன் விவசாயிகளை அழைத்து பேசி நிலத்தை கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டோம். இந்த திட்டம் 4 நிலைகளாக பிரிக்கப்பட்டது. அதில் 2 கட்ட பணிகள் 90 சதவீதம் முடிவடைந்து விட்டது. 3-ம் கட்ட பணிகள் 43 சதவீதம் நிறைவடைந்து விட்டது. 4-ம் கட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும். இந்த திட்டம் 2020-ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும்.

ரூ.200 கோடி மதிப்பில் பச்சையாறு திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் நாங்குநேரி பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். பொதுமக்களின் குடிநீர் பிரச்சினை தீரும்.

தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் நாங்குநேரி பிரசார கூட்டத்தின்போது அ.தி.மு.க.வினர் பணம் கொடுத்து ஓட்டு பெற முயற்சிக்கிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளார். இது முற்றிலும் தவறான பிரசாரம் ஆகும். வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அவரது மகன் போட்டியிட்ட போது, கோடிக்கணக்கான பணத்தை வருமானவரித்துறையினர் கைப்பற்றினார்கள். இதன்மூலம் அந்த தொகுதியில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தியாவிலேயே வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தான் மறுத்தேர்தல் நடந்தது. தற்போது நாங்குநேரியில் தி.மு.க.வினர் பணம் கொடுத்து ஓட்டு வாங்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் அவர்கள் அ.தி.மு.க.வினர் மீது வீண்பழி சுமத்துகிறார்கள்.

தமிழகத்தில் முதியோர்களுக்கு ஆயிரம் ரூபாய் பென்சன் திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் 5 லட்சம் முதியவர்களுக்கு பென்சன் வழங்கப்படும். ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 2 ஆயிரம் பேர் கணக்கெடுத்து வைத்து இருக்கிறோம். விரைவில் பென்சன் வழங்கப்படும்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கல்வித்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கினார். அதன்மூலம் கல்வி தேர்ச்சி சதவீதம் உயர்ந்து உள்ளது.

நான் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றேன். அன்னிய முதலீடுகள் மூலம் 41 தொழிற்சாலைகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், நான் வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

நான் ஒரு கேள்வி கேட்கிறேன். மு.க.ஸ்டாலின் 4 மாதங்களுக்கு ஒருமுறை லண்டன் சென்று வருகிறார் என்று பரவலாக பேசப்படுகிறது. அவர் உடல் நலக்குறைவால் செல்வதாக ஒரு சிலர் கூறுகிறார்கள். தி.மு.க. ஆட்சி காலத்தில் கொள்ளை அடிக்கப்பட்ட பணங்கள் லண்டனில் உள்ள வங்கிகளில் பதுக்கி வைத்து இருப்பதாக சிலர் கூறுகிறார்கள். எது உண்மை. எது பொய் என்று தெரியவில்லை. இதுகுறித்து மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்.

அ.தி.மு.க. அரசு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தது. ஆனால் கடந்த முறை தி.மு.க. 96 எம்.எல்.ஏ.க்களுடன் ஆட்சி நடத்தினார்கள். எங்கள் ஆட்சி மெஜாரிட்டி ஆட்சி. அ.தி.மு.க. அரசை பற்றி விமர்சனம் செய்ய மு.க.ஸ்டாலினுக்கு தகுதி கிடையாது. மக்களுக்காக போராடும் ஒரே கட்சி அ.தி.மு.க. தான்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக மாவட்ட எல்லையான அரியகுளம் விலக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, புறநகர் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரெட்டியார்பட்டியில் அவருக்கு செண்டை மேளம், கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால்குதிரை உள்ளிட்ட பல்வேறு கிராமிய கலைகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது. ஏராளமான பெண்கள் ஆரத்து எடுத்து வரவேற்றனர்.

பிரசாரத்தில் வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், மாநில துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் தங்கமணி, செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர், டாக்டர் விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ்.மணியன், உதயகுமார், ராஜலட்சுமி, வளர்மதி காமராஜ், ராஜேந்திர பாலாஜி, அமைப்பு செயலாளர்கள் மனோஜ் பாண்டியன், சுதா பரமசிவம், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், விஜிலா சத்யானந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் செல்வமோகன்தாஸ் பாண்டியன், மனோகரன், நெல்லை மாநகர் மாவட்ட அவை தலைவர் பரணிசங்கரலிங்கம், நெல்லை கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், த.மா.கா. மாநில துணை தலைவர் கோவை தங்கம், துணை பொது செயலாளர் விடியல் சேகர், செயலாளர் சார்லஸ், மாவட்ட தலைவர்கள் சுத்தமல்லி முருகேசன், சமத்துவ மக்கள் கட்சி மாநில துணை பொது செயலாளர் சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story