குற்றாலத்தில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு: நெல்லையில் கொட்டித்தீர்த்த கனமழை


குற்றாலத்தில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு: நெல்லையில் கொட்டித்தீர்த்த கனமழை
x
தினத்தந்தி 30 Oct 2019 10:00 PM GMT (Updated: 30 Oct 2019 7:35 PM GMT)

நெல்லையில் கொட்டித்தீர்த்த மழையால் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. குற்றாலம் அருவிகளில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

நெல்லை, 

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. மேலும் வங்ககடல் மற்றும் இலங்கை கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும் மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் நெல்லை, தென்காசி, செங்கோட்டை, அம்பை, ஆய்க்குடி, சேரன்மாதேவி, நாங்குநேரி, பாளையங்கோட்டை, ராதாபுரம், சங்கரன்கோவில் உள்ளிட்ட ஊர்களிலும் விடிய விடிய பலத்த மழை கொட்டித் தீர்த்தது. அதிக பட்சமாக சேரன்மாதேவியில் 101 மில்லி மீட்டர் மழை பதிவானது.

இட்டமொழி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக சாலைகள், தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அங்குள்ள ஊரணி குளம் நிரம்பி மறுகால் சென்றது. இட்டமொழி சி.எஸ்.ஐ. சர்ச் முன்பு சாலையில் மழைநீர் வெள்ளமாக சென்றதால் அதில் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இட்டமொழி தெற்கு தெருவில் சிமெண்டு சாலை அமைப்பதற்காக மணல் கொட்டி வைத்துள்ளதால் மழைநீர் செல்ல முடியாமல் மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் வீடுகளில் உள்ளவர்கள் பெரிதும் சிரமப்பட்டனர். திசையன்விளையில் விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது. இந்திரா மார்க்கெட்டில் உள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் உள்ள கடைகளில் தண்ணீர் புகுந்தது. எனவே கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்றும் மாவட்டத்தில் பல இடங்களில் மழை பெய்தது. நெல்லை தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பாளையங்கோட்டை, மேலப்பாளையம் பகுதியில் உள்ள பல தெருக்களில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்து நின்றது. நெல்லையப்பர் கோவில் முன்பகுதியில் மழை நீர் புகுந்தது. கோவில் பணியாளர்கள் மழை நீரை அப்புறப்படுத்தினார்கள். பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி நின்றது.

விடிய விடிய கொட்டித்தீர்த்த பலத்த மழையால் நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நேற்று செய்முறை தேர்வு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மழையின் காரணமாக அந்த தேர்வு இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் என பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ்பாபு அறிவித்தார்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நேற்று முன்தினம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று காலையிலும் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவி, புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

மாஞ்சோலை மலைப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மணிமுத்தாறு அணைக்கு செல்லும் சாலைப்பணிகள் இன்னும் முடிவடையாததால் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல 6-வது மாதமாக தடை நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழை அளவு (மில்லி மீட்டர்) விவரம் வருமாறு:-

அம்பை- 86, ஆய்க்குடி- 25.80, சேரன்மாதேவி- 101, நாங்குநேரி- 75.20, பாளையங்கோட்டை- 72, சங்கரன்கோவில்- 30, செங்கோட்டை- 9, சிவகிரி- 39, தென்காசி- 21, நெல்லை- 37.

Next Story