வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது


வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 1 Nov 2019 4:00 AM IST (Updated: 31 Oct 2019 9:57 PM IST)
t-max-icont-min-icon

வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு, 

ஈரோடு டவுன் போலீசார் கடந்த மாதம் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது ஈரோடு பெரியசேமூர் கொத்துக்காரர்தோட்டம் பகுதியை சேர்ந்த தர்மலிங்கத்தின் மகன் தமிழ் என்ற தமிழ்செல்வன் (வயது 26) பிடிபட்டார். அவர் மீது ஈரோடு வீரப்பன்சத்திரம், டவுன் குற்றப்பிரிவு, கருங்கல்பாளையம் ஆகிய போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, திருட்டு போன்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தமிழ்செல்வனை போலீசார் கைது செய்தனர். அவரை போலீசார் ஈரோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கைதான தமிழ்செல்வன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஈரோடு மாவட்ட கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் தமிழ்செல்வனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டார்.

இதேபோல் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததாக மொடக்குறிச்சி லக்காபுரம் காளியம்மன் கோவில் நடுவீதியை சேர்ந்த செந்தில்குமார் (43) என்பவரை மொடக்குறிச்சி போலீசார் கைது செய்தனர். அவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் 24 வழக்குகள் உள்ளன. எனவே அவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் செந்தில்குமாரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

குண்டர் சட்டத்தில் கைதான தமிழ்செல்வன், செந்தில்குமார் ஆகியோர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

Next Story