ராமேசுவரம், மண்டபம் விசைப்படகு மீனவர்கள் ஒரு வாரத்திற்கு பின்பு மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்


ராமேசுவரம், மண்டபம் விசைப்படகு மீனவர்கள் ஒரு வாரத்திற்கு பின்பு மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்
x
தினத்தந்தி 3 Nov 2019 4:00 AM IST (Updated: 3 Nov 2019 3:59 AM IST)
t-max-icont-min-icon

ஒரு வாரத்திற்கு பின்பு ராமேசுவரம், மண்டபம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

ராமேசுவரம்,,

ராமேசுவரம், பாம்பன் பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த மாதம் 26-ந்தேதியிலிருந்து மீன்பிடிக்க செல்லவில்லை. தீபாவளி பண்டிகை முடிந்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல இருந்த நிலையில் அரபிக்கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்துறை அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டது.

இதனால் கடந்த ஒரு வாரமாக ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஏராளமான நாட்டுப்படகுகளும் மீன்பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் அரபிக்கடலில் உருவாகியிருந்த புயல் சின்னத்தால் தமிழகத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

மண்டபம் மீனவர்கள்

அதைதொடர்ந்து ஒரு வாரத்திற்கு பிறகு ராமேசுவரத்தில் நேற்று மீன்பிடி டோக்கன் பெற்று மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் 500-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வடக்கு கடலான பாக்ஜலசந்தி கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர். இந்த மீனவர்கள் அனைவரும் இன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை கரை திரும்புகிறார்கள். கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்துள்ளதால் வழக்கத்தை காட்டிலும் மீன்கள் வரத்து அதிகமாக இருக்கும் என்ற எதிர் பார்ப்பில் மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர்.

பாம்பன் பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் இன்று காலை மீன்துறை அதிகாரிகளிடம் டோக்கன் பெற்று தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். அது போல் ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி பகுதிகளை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்களும் வழக்கம் போல் மீன் பிடிக்க சென்று விட்டனர்.

இதே போல் மண்டபம் பகுதியிலிருந்தும் நேற்று 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வடக்கு கடலான பாக்ஜலசந்தி கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர்.


Next Story