பணி நிரந்தரம் செய்ய கோரி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சாலை மறியல் செய்ய முயற்சி 350 பேர் கைது


பணி நிரந்தரம் செய்ய கோரி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சாலை மறியல் செய்ய முயற்சி 350 பேர் கைது
x
தினத்தந்தி 6 Nov 2019 4:30 AM IST (Updated: 6 Nov 2019 12:44 AM IST)
t-max-icont-min-icon

பணி நிரந்தரம் செய்ய கோரி தஞ்சையில் சாலை மறியல் செய்ய முயற்சி செய்த மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 350 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் பணி நிரந்தரம், தினக்கூலி ரூ.380 வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 1-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக தஞ்சை மணிமண்டபம் அருகே உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் பல்வேறு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதற்கு மாநில துணைச் செயலாளர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜான்போஸ்கோ, செயலாளர் அருளானந்தையா, பொருளாளர் விஜய், செயற்குழுஉறுப்பினர் பாலசந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக அலுவலக வளாகத்தில் இருந்து தஞ்சை-புதுக்கோட்டை சாலையை நோக்கி ஊர்வலமாக வந்தனர். ஆனால் அவர்களை சாலைக்கு செல்ல விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

கைது

மேலும் மறியல் செய்ய முயன்றால் கைது செய்வோம் என போலீசார் எச்சரித்தனர். ஆனால் அதையும் மீறி மறியல் செய்வதற்கு முயற்சி செய்த ஒப்பந்த தொழிலாளர்களை போலீசார் கைது செய்து மினிபஸ், வேனில் ஏற்றி சென்றனர். மொத்தம் 350 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து ஒப்பந்த தொழிலாளர்கள் கூறும்போது, நாங்கள் பல ஆண்டுகளாக குறைந்த கூலிக்கு மின்சார வாரியத்தில் பல்வேறு நிலைகளில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறோம். என்றைக்காவது பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். தமிழகத்தில் ஏற்படக்கூடிய பேரிடர் காலங்களில் நாங்கள் பணியாற்றி இருக்கிறோம். எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பலமுறை மனு அளித்துள்ளோம்.

போராட்டம் தொடரும்

ஆனால் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. மின்சாரத்துறை அமைச்சர், தலைமை பொறியாளர், மின்வாரிய தலைவர் ஆகியோர் எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியபோது தினக்கூலி ரூ.380 அளிப்பதாக உறுதி அளித்தனர். ஆனால் அதற்கு பதிலாக புதிதாக ஆட்களை தேர்வு செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே எங்களை பணி நிரந்தரம் செய்து தினக்கூலி ரூ.380 வழங்க வேண்டும். எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.

Next Story