கலெக்டர் அலுவலகம் முன்பு இந்து கணிக்கர் சாதிச்சான்றிதழ் கேட்டு சங்கத்தினர் உண்ணாவிரதம்


கலெக்டர் அலுவலகம் முன்பு இந்து கணிக்கர் சாதிச்சான்றிதழ் கேட்டு சங்கத்தினர் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 7 Nov 2019 4:00 AM IST (Updated: 6 Nov 2019 10:27 PM IST)
t-max-icont-min-icon

பள்ளியில் படிக்கும் தங்களது குழந்தைகளுக்கு இந்து கணிக்கர் சாதிச்சான்றிதழ் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன் உண்ணாவிரதம் இருந்தவர்கள் குடுகுடுப்பை அடித்தபடி கோஷம் எழுப்பியவாறு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை,

ஆரணி, அய்யம்பாளையம் புதூர் பகுதியில் கணிக்கர் சமூகத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். அனைவரும் ஏழ்மை நிலையிலேயே வசிக்கின்றனர். குடுகுடுப்பை அடித்து குறி சொல்லி அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் இவர்கள் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இவர்களது குழந்தைகளை பள்ளியில் சேர்த்துள்ளனர். ஆனால் இவர்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்கப்படாததால் அரசு வழங்கும் சலுகைகள் கிடைப்பதில்லை.

இந்த நிலையில் இவர்கள் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுடன் சாதிச்சான்றிதழ் வழங்கக்கோரி நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். இங்கு நுழைவுவாயில் முன்பு பிள்ளைகளுடன் அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரதத்துக்கு கணிக்கர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜாமணி தலைமை தாங்கினார். செயலாளர் பொன்னுசாமி முன்னிலை வகித்தார். உண்ணாவிரதத்தின்போது அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி குடுகுடுப்பைகளை அடித்தபடி கோஷங்களை எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

உண்ணாவிரதம் குறித்து அவர்கள் கூறியதாவது:-

நாங்கள் ஆரணி பள்ளிக் கூடத்தெருவில் 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். நாங்கள் இந்து கணிக்கர் சாதிச்சான்றிதழ் கேட்டு 40 ஆண்டுகளாக போராடி வருகிறோம். ஆனால் சாதிச்சான்றிதழ் வழங்க அதிகாரிகள் மறுக்கின்றனர்.

மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. எனினும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. சாதிச்சான்று இல்லாததால் எங்களது குழந்தைகள் உயர்கல்வியை தொடர முடியவில்லை. இதனால் பள்ளி மாணவ- மாணவிகள் பலர் தவித்து வருகின்றனர்.

பள்ளி படிப்புடன்அவர்களின் கல்வி கனவு முடிந்துபோகிறது. அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. எங்களது குழந்தைகளின் எதிர்காலம் மாற வேண்டும். அதற்கு சாதிச்சான்று அவசியமான ஒன்றாக உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

உண்ணாவிரத போராட்டத்தை முன்னிட்டு கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் அய்யம்பாளையம் புதூர் குடுகுடுப்பைக்காரர்களும் கலந்து கொண்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் அவர்கள் போராட்டத்தை கைவிடாமல் தொடர்வதாக அறிவித்தனர்.

Next Story