பச்சிளம் ஆண் குழந்தை ரூ.1¼ லட்சத்துக்கு விற்பனை 2 தம்பதி உள்பட 5 பேர் கைது


பச்சிளம் ஆண் குழந்தை ரூ.1¼ லட்சத்துக்கு விற்பனை 2 தம்பதி உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 8 Nov 2019 4:45 AM IST (Updated: 7 Nov 2019 11:50 PM IST)
t-max-icont-min-icon

மணப்பாறை அருகே பச்சிளம் ஆண் குழந்தையை ரூ.1¼ லட்சத்துக்கு விற்பனை செய்ததாக குழந்தையை விற்ற மற்றும் வாங்கிய 2 தம்பதிகளையும், பெண் புரோக்கரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

மணப்பாறை,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள பேராவூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 52). விவசாயி. இவருடைய மனைவி ராமாயி (50). கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த தம்பதி, பிறந்து 20 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டிருந்த அந்த குழந்தை எடை 1 கிலோ 100 கிராம் மட்டுமே இருந்தது. அந்த குழந்தை பச்சிளம் குழந்தைகள் வார்டில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அப்போது, அந்த குழந்தை அழுதுகொண்டே இருந்ததால், அதற்கு தாய்ப்பால் கொடுக்கும்படி பணியில் இருந்த நர்சு ராமாயியிடம் கூறியுள்ளார்.

ரூ.1¼ லட்சத்துக்கு வாங்கப்பட்ட குழந்தை

ஆனால், ராமாயி குழந்தையை வாங்கி தாய்ப்பால் கொடுக்காமல், தயங்கிக்கொண்டு இருந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த நர்சு டாக்டர்களிடம் இதுபற்றி கூறியுள்ளார். டாக்டர்கள் வந்து குழந்தை குறித்து விசாரித்த போது, அந்த குழந்தையை ரூ.1¼ லட்சத்துக்கு விலைக்கு வாங்கி வளர்ப்பதாக அந்த தம்பதி தெரிவித்துள்ளனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் இதுபற்றி குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். உடனே மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் கீதா, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் அஜ்மல் ஆகியோர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அந்த தம்பதியிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பரபரப்பான தகவல்கள் கிடைத்தன. அதன் விவரம் வருமாறு:-

எச்.ஐ.வி. நோயால் பாதிப்பு

மணப்பாறை அருகே உள்ள முத்தப்புடையான்பட்டியைச் சேர்ந்த புரோக்கரான அந்தோணியம்மாள் என்ற பெண் மூலம் கடந்த 20-ந்தேதி முனியப்பன் கோவில் அருகே ஒரு தம்பதியிடம் இருந்து பிறந்து 6 நாட்களான பச்சிளம் ஆண் குழந்தையை ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் கொடுத்து முருகேசன்-ராமாயி தம்பதியினர் வாங்கி உள்ளனர்.

குழந்தையை விற்ற தம்பதி எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகனும், மகளும் உள்ளனர். கூலிவேலை செய்துவரும் அந்த தம்பதிக்கு 3-வதாக ஆண் குழந்தை கடந்த 14-ந்தேதி பிறந்துள்ளது. இதுபற்றி அறிந்த அந்தோணியம்மாள், அந்த தம்பதியை தொடர்பு கொண்டு உங்கள் குழந்தையை விற்றுத்தருகிறேன் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

5 பேர் கைது

வறுமையாலும், தாங்கள் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாலும் தங்களின் 3-வது குழந்தையை விற்க அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி, வெற்று பத்திரத்தில் அவர்கள் கையெழுத்து போட்டு, பணத்தை வாங்கிக்கொண்டு குழந்தையை கொடுத்துள்ளனர். குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால், அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றால் மாட்டிக்கொள்வோம் என்று திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தையை எடுத்துக்கொண்டு வந்த போது, முருகேசன்-ராமாயி தம்பதி மாட்டிக்கொண்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தையின் பெற்றோர், குழந்தையை வாங்கிய முருகேசன்-ராமாயி தம்பதி, புரோக்கர் அந்தோணியம்மாள் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.


Next Story