பாரதீய ஜனதா ஆட்சியில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரிப்பு - டி.கே.ரெங்கராஜன் எம்.பி. குற்றச்சாட்டு


பாரதீய ஜனதா ஆட்சியில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரிப்பு - டி.கே.ரெங்கராஜன் எம்.பி. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 8 Nov 2019 4:30 AM IST (Updated: 8 Nov 2019 2:36 AM IST)
t-max-icont-min-icon

பாரதீய ஜனதா ஆட்சியில் படித்து விட்டு வேலை இல்லாதோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என டி.கே.ரெங்கராஜன் எம்.பி. குற்றம் சாட்டினார்.

நெல்லை, 

நெல்லையில் நவம்பர் புரட்சி தினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நேற்று காலை செங்கொடி ஏற்று விழா நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன் எம்.பி. கலந்து கொண்டு கொடியேற்றினார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டு 3 ஆண்டுகள் ஆகியும் விளைவுகள் மோசமாகத்தான் உள்ளது. சிறுதொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. ஆசிய நாடுகளுடன் பொருளாதார ரீதியிலான இணைப்பை இந்தியா பெற முடியாத நிலையில் இருந்து வருகிறது. பாரதீய ஜனதா ஆட்சியில் படித்து விட்டு வேலை இல்லாதோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் பி.எச்.டி. பட்டதாரிகளும் வேலையின்றி உள்ளனர்.

ராமர் பூமி, ராமருக்கான பூஜை, திருவள்ளுவருக்கு காவி உடையை அணிவிப்பது என்றுதான் பாரதீய ஜனதாவின் அரசியல் இருக்கிறது. இது நாட்டுக்கு அழிவை ஏற்படுத்தும் பாதையை காட்டுகிறது. ரிசர்வ் வங்கியில் உள்ள பணத்தை எடுத்து பாரதீய ஜனதா அரசு செலவு செய்து வருகிறது. மத்திய அரசு வரவு-செலவை தாக்கு பிடிக்க முடியாத நிலையில் உள்ளது.

தாமிரபரணி நதிக்கரையில் உள்ள அகழாய்வு பணிகளை தொடர வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது நெல்லை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பாஸ்கரன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Next Story