பூரிக்கட்டையால் மனைவியை அடித்து கொன்ற கணவன் தலைவலியால் இறந்ததாக நாடகமாடியது அம்பலம்


பூரிக்கட்டையால் மனைவியை அடித்து கொன்ற கணவன் தலைவலியால் இறந்ததாக நாடகமாடியது அம்பலம்
x
தினத்தந்தி 12 Nov 2019 11:15 PM GMT (Updated: 12 Nov 2019 8:28 PM GMT)

திருவொற்றியூரில் பூரிக்கட்டையால் மனைவியை அடித்து கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார். தலைவலியால் இறந்ததாக அவர் நாடகமாடியது அம்பலமானது.

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 40). இவரது மனைவி வனிதா (32). இவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி யோகேஷ்வரன், மாதேஸ்வரன் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி வனிதா திடீரென உயிரிழந்துவிட்டார். இதையடுத்து ஏழுமலை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் வனிதாவின் உடலை தனது சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கோவிலூர் என்ற கிராமத்திற்கு எடுத்து சென்றார். அங்கு உறவினர்களிடம் அடிக்கடி ஏற்பட்ட தலைவலியால் உடல்நல குறைவு ஏற்பட்டு மனைவி வனிதா இறந்துவிட்டார் என்று கூறியுள்ளார்.

ஆனால் வனிதாவின் தந்தை குப்புசாமி, தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக திருவண்ணாமலை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து திருவண்ணாமலை போலீசார், திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்து வனிதாவின் உடலை மீண்டும் ஆம்புலன்ஸ் மூலம் திருவொற்றியூருக்கு அனுப்பிவைத்தனர்.

பிரேத பரிசோதனை

இதைத்தொடர்ந்து, திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். அதன் பின்னர், பிரேத பரிசோதனை அறிக்கையில் கட்டையால் தாக்கப்பட்டதில் வனிதா உயிரிழந்து இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் ஏழுமலையிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், தனக்கும், தன் மனைவிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டதாகவும், தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த நான் வீட்டில் இருந்த பூரிக்கட்டையால் வனிதாவின் தலையில் அடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

கணவர் கைது

இதில் பலத்த காயம் அடைந்த மனைவி வனிதாவிற்கு அருகிலுள்ள மருந்தகத்தில் மருந்து மாத்திரைகளை வாங்கி கொடுத்ததாகவும், ஆனாலும் தொடர்ந்து வனிதாவிற்கு தலையில் வலியும், அடிக்கடி மயக்கமும் ஏற்பட்ட நிலையில் அவர் திடீரென இறந்து விட்டதால் என்ன செய்வதென்று தெரியாமல் சொந்த ஊருக்கு மனைவியின் உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்து மூடி மறைத்து விடலாம் என்று நினைத்ததாக ஏழுமலை கூறினார். ஆனால் வனிதாவின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசாரிடம் மாட்டிவிட்டதாக அவர் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி வனிதாவின் கணவரான ஏழுமலையை நேற்று கைது செய்தனர்.


Next Story