வீட்டில் இருந்த மிக்சியை விற்று மது வாங்கியதால் ஆத்திரம்: தையல் தொழிலாளியை கட்டையால் அடித்துக்கொன்ற மனைவி கைது


வீட்டில் இருந்த மிக்சியை விற்று மது வாங்கியதால் ஆத்திரம்: தையல் தொழிலாளியை கட்டையால் அடித்துக்கொன்ற மனைவி கைது
x
தினத்தந்தி 21 Nov 2019 4:45 AM IST (Updated: 20 Nov 2019 10:31 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் அருகே வீ்ட்டில் இருந்த மிக்சியை விற்று மது வாங்கிய தையல் தொழிலாளியை கட்டையால் அடித்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

மங்கலம்,

திருப்பூர் மாவட்டம் மங்கலத்தை அடுத்த மீனாட்சி நகர் 2-வது வீதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 49). இவருடைய மனைவி உமாதேவி (47). இவர்களுடைய மகன் நிவேதன் (21). கணவன்-மனைவி இருவரும் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டின் மாடிப்படியில் இருந்து வெங்கடேசன் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அதன்பின்னர் அவர் வேலைக்கு போகாமல் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் மது குடிக்கும் பழக்கத்திற்கு ஆளானார். வீ்ட்டில் போதிய வருமானம் இல்லாத நிலையில் வீட்டில் உள்ள பொருட்களை ஒவ்வொன்றாக விற்று மது குடித்து வந்துள்ளார்.

சாவு

இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி காயத்துடன் வெங்கடேசனை திருப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு உமாதேவி அழைத்து சென்றார். அப்போது தனது கணவர் மொபட்டில் இருந்து கீழே விழுந்து காயம் அடைந்து விட்டதாக டாக்டர்களிடம் தெரிவித்து சிகிச்சை அளிக்குமாறு கூறினார். இதனைத்தொடர்ந்து வெங்கடேசனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் உமாதேவி கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் விபத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். இதற்கிடையில் சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் இறந்து விட்டதால் அவருடைய உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உறவினர்களும் அவருடைய உடலை ஊருக்கு கொண்டு வந்து இறுதி சடங்கு செய்து எரித்து விட்டனர்.

வாக்குமூலம்

இந்த நிலையில் வெங்கடேசனின் உடல் பிரதே பரிசோதனை அறிக்கை மங்கலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் வெங்கடேசன் மொபட்டில் இருந்து கீழே விழுந்து இறக்கவில்லை என்றும், அவர் கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும், தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து மங்கலம் போலீசார் விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றி உமாதேவியிடம் விசாரித்தனர். விசாரணையின் போது அவர், முதலில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளார். பின்னர் தீவிர விசாரணைக்கு பிறகு அவர் போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

கடந்த 17-ந் தேதி வேலைக்கு சென்று விட்டு வீ்ட்டிற்கு வந்தேன். அப்போது வீட்டில் எனது கணவர் மது பாட்டிலும், இறைச்சியும் வாங்கி வைத்து இருந்தார். இதற்கு பணம் எங்கிருந்து கிடைத்தது என்று அவரிடம் கேட்டேன். அப்போது வீட்டில் இருந்த மிக்சியை விற்று வாங்கி வந்ததாக கூறினார். இதனால் அவருக்கும் எனக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வெங்கடேசன் கோபம் அடைந்து என்னை தாக்க முயற்சித்தார். சுதாரித்துக்கொண்ட நான் அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து அவரை தாக்கினேன். இதனால் பலத்த காயம் அடைந்த அவர் மயங்கி கீழே விழுந்தார்.

இந்த சம்பவம் போலீசாருக்கு தெரிந்தால், சிக்கலாகி விடும் என்பதால், பயந்து அதை மறைப்பதற்காக மொபட்டில் இருந்து எனது கணவர் கீழே விழுந்ததில் காயம் அடைந்து விட்டார் என உறவினர்களிடமும், போலீசாரிடமும் பொய் கூறினேன். அதன்பின்னர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தேன். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் வெங்கடேசன் விபத்தில் இறக்க வில்லை என்றும், அவர் கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்ததால் போலீசாரிடம் சிக்கிக்கொண்டேன்.

இவ்வாறு உமாதேவி வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கைது

இதையடுத்து உமாதேவியை கைது செய்த போலீசார் அவரை திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story