நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு வெற்றிடம் காரணம் இல்லை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி


நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு வெற்றிடம் காரணம் இல்லை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
x
தினத்தந்தி 20 Nov 2019 11:00 PM GMT (Updated: 20 Nov 2019 8:01 PM GMT)

நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு வெற்றிடம் காரணமே இல்லை என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தேனி,

தேனியில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார். விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு, கூட்டுறவுத்துறை சார்பில் 551 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியே 49 லட்சத்து 30 ஆயிரத்து 807 மதிப்பில் பல்வேறு கடன் உதவிகளை வழங்கினார்.

மேலும், கூட்டுறவு வார விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்களையும் அவர் வழங்கி பேசினார்.

ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

விழாவை தொடர்ந்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:-

கேள்வி:- அமெரிக்க பயணம் எப்படி இருந்தது?

பதில்:- அமெரிக்க பயணம் அரசுமுறை பயணம். எந்த நோக்கத்திற்காக சென்றோமோ அது முழுமையாக வெற்றி பெற்றுள்ளது. தமிழக மக்களின் வளர்ச்சி, மக்களின் நலன் சார்ந்த பயணமாக இருந்தது.

கேள்வி:- உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

பதில்:- உள்ளாட்சி தேர்தல் எப்போது வந்தாலும் எதிர்கொள்ள அ.தி.மு.க. தயாராக உள்ளது. மிகப்பெரிய வெற்றியை பெறுவோம்.

ரஜினி-கமல்

கேள்வி:- நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் அரசியலில் இணைந்து செயல்பட போவதாக பேசப்பட்டு வருகிறதே?

பதில்:- தேர்தல் வரட்டும். ரஜினியும், கமலும் சிறந்த நடிகர்கள். அரசியலில் அவர்கள் இணைந்து ஈடுபட்டால் அதன்பிறகு கருத்து கூறுகிறேன்.

கேள்வி:- உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி மேயரை மறைமுகமாக தேர்வு செய்வதற்கு பா.ஜ.க. முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளாரே?

பதில்:- ஜெயலலிதா மறைமுக தேர்தலை நடத்த விரும்பினார். அவர் வழியில் செயல்படும் அரசும், அதே வழியில் தேர்தலை நடத்தும்.

கேள்வி:- நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியிருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்:- இது மதசார்பற்ற நாடு. யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம். அரசியலுக்கு வரலாம்.

வெற்றிடம் இல்லை

கேள்வி:- தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதால் தான் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்களா?

பதில்:- அதற்கு வெற்றிடம் காரணமே இல்லை. அ.தி.மு.க.வை பொறுத்தவரை எம்.ஜி.ஆர். தொண்டர் களின் இயக்கமாகவே தொடங்கினார். ஜெயலலிதாவும் தொண்டர்கள் இயக்கமாகவே வளர்த்தெடுத்தார். தொடர்ந்து மக்கள் இயக்கமாகவே செயல்படும். மக்கள் இப்போது எங்கள் பக்கம் உள்ளனர்.

கேள்வி:- இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றுள்ளது தமிழர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுவது குறித்து அ.தி.மு.க.வின் கருத்து என்ன?

பதில்:- இலங்கை மட்டுமல்ல, உலகில் எங்கு தமிழர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டாலும் பரிசீலித்து நடவடிக்கை எடுப்போம்.

கேள்வி:- ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்:- மாணவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்த விசாரணை முடிவு வந்தவுடன் கருத்து சொல்லலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்துகொண்டவர்கள்

முன்னதாக நடந்த விழாவில், கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், பெரியகுளம் சப்-கலெக்டர் சினேகா, மாநில கூட்டுறவு நூற்பாலை இணைய தலைவர் திருலோகசுந்தர், தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வங்கி துணைத்தலைவர் இளையநம்பி, மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் ராஜகுரு, தேனி கூட்டுறவு கட்டிட சங்க தலைவர் தியாகராஜன், தேனி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் ராமகிருட்டிணன் மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள், கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக தேனி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சிவ.முத்துக்குமாரசாமி வரவேற்றார். முடிவில், துணைப்பதிவாளர் முத்துக்குமார் நன்றி கூறினார்.

வரவேற்பு

முன்னதாக திண்டுக்கல்- தேனி மாவட்ட எல்லையான தேவதானப்பட்டி அருகே உள்ள காட்ரோட்டில், தேனி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதற்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சையதுகான் தலைமை தாங்கினார். பொருளாளர் செல்லமுத்து, பெரியகுளம் ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ், கெங்குவார்பட்டி முன்னாள் சேர்மன் காட்டுராஜா மற்றும் நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், அ.தி.மு.க. தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Next Story