கோரிக்கைகளை தெரிவிக்கும் விவசாயிகளை மதிக்காவிட்டால் கடும் நடவடிக்கை - அதிகாரிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை


கோரிக்கைகளை தெரிவிக்கும் விவசாயிகளை மதிக்காவிட்டால் கடும் நடவடிக்கை - அதிகாரிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 30 Nov 2019 3:45 AM IST (Updated: 30 Nov 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை தெரிவிக்கும் விவசாயிகளை மதிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் கோவிந்தராவ் எச்சரிக்கை விடுத்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் கோவிந்தராவ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் 98 ஆயிரத்து 516 எக்டேரில் சம்பாவும், 29 ஆயிரத்து 372 எக்டேரில் தாளடியும் என மொத்தம் 1 லட்சத்து 27 ஆயிரத்து 888 எக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தின் உர தேவைக்காக யூரியா 3 ஆயிரத்து 245 டன்னும், டி.ஏ.பி. 4 ஆயிரத்து 710 டன்னும், பொட்டா‌‌ஷ் 3,811 டன்னும், காம்ப்ளக்ஸ் உரம் 4,271 டன்னும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும், தனியார் விற்பனை நிலையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் குறுவை பருவத்தில் 25 ஆயிரத்து 264 டன் நெல், கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

விவசாய குடும்பத்தில் இருந்து வந்துள்ள நான், விவசாயிகள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உங்களது கோரிக்கைகள் நிறைவேற அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுவேன். தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழ்ந்து வரும் நமது மாவட்டத்தை நாட்டின் முன்னோடி மாவட்டமாக கொண்டு செல்ல விவசாயிகளின் ஒத்துழைப்பு தேவை.

அனைத்துத்துறை அதிகாரிகளும் கடின உழைப்புடன் விவசாயிகளின் கோரிக்கையை 100 சதவீதம் அல்ல, 110 சதவீதம் நிறைவேற்ற வேண்டும். அதிகாரிகளை விவசாயிகள் தொடர்பு கொண்டு கோரிக்கை தெரிவித்தால் அதற்கு மதிப்பு கொடுத்து பதில் அளிக்க வேண்டும். விவசாயிகளை மதிக்காவிட்டால் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தங்கள் மீது புகார் ஏதும் வராமல் அதிகாரிகள் கவனமாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் விவசாயிகள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

மருத்துவக்குடி முருகேசன்: முத்தரப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும். சம்பா நெல்லை கொள்முதல் செய்ய சாக்குகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். யூரியா உரம் தட்டுப்பாடு இருப்பதை போல் சாக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

ராயமுண்டான்பட்டி ஜீவக்குமார்: யூரியா விற்பனை விலையில் ஊருக்கு ஊர் ஏற்றத்தாழ்வு உள்ளது. ஆலக்குடியில் ஒரு மூட்டை ரூ.300-க்கும், பூதலூரில் ரூ.350-க்கும், செங்கிப்பட்டியில் ரூ.380-க்கும் விற்கப்படுகிறது.

தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மணல் கொள்ளை நடக்கிறது. எனவே புதிய மாவட்ட கலெக்டர் இதை ஒரு சவாலாக எடுத்து சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். மேட்டூர் அணைக்கு கீழே புதிதாக ஏரி, குளம் வெட்டும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் மட்டுமே வழங்கப்படுகிறது. பயிர்க்கடன் வழங்கப்படுவது இல்லை. எனவே விவசாயிகளுக்கு நிபந்தனையின்றி பயிர்க்கடன் வழங்க வேண்டும்.

நரசிங்கம்பேட்டை ரவிச்சந்திரன்: பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகை யாருக்கெல்லாம் கிடைக்கவில்லை என்ற பட்டியலை கொடுத்துவிட்டு 1 ஆண்டாக அலைந்து வருகிறேன். ஆனால் எந்த தீர்வும் கிடைக்கவில்லை. இழப்பீட்டு தொகை யாருக்கெல்லாம் கிடைத்தது? கிடைக்காதவர்கள் யார்? எதற்காக கிடைக்கவில்லை? என்று பட்டியலை வெளியிட வேண்டும்.

தஞ்சை கண்ணன்: கோவில்பத்து கிராமத்தில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. போராட்டம் நடத்தியும், பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் இன்னும் வழங்கப்படவில்லை. உடனே இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்.

கக்கரை சுகுமாறன்: தனியார் உரக்கடைகளில் யூரியா ரூ.300-க்கும், பொட்டா‌‌ஷ் ரூ.1,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. உரத்தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தஞ்சை செந்தில்குமார்: வாழைத்தார் வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப் பட்டுள்ளனர். அவர்களுக்கு ந‌‌ஷ்டஈடு வழங்க வேண்டும்.

கீழக்கோட்டை தங்கவேல்: கல்லணைக்கால்வாயில் உள்ள அனைத்து பாசன வாய்க்கால்களையும் தூர்வாரி கரைகளை உயர்த்தி, மதகுகளை சீரமைக்க வேண்டும்.

அருமலைக்கோட்டை தங்கராசு: கால்நடைகளுக்கு உணவான வைக்கோலை சேமிக்க கிடங்கு அமைக்க வேண்டும்.

மேற்கண்டவாறு விவசாயிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

Next Story