பாலக்கோடு பேரூராட்சியில் வார்டு மறுவரையறையை சீராய்வு செய்ய வேண்டும் முஸ்லிம்கள் மனு


பாலக்கோடு பேரூராட்சியில் வார்டு மறுவரையறையை சீராய்வு செய்ய வேண்டும் முஸ்லிம்கள் மனு
x
தினத்தந்தி 9 Dec 2019 11:00 PM GMT (Updated: 9 Dec 2019 10:10 PM GMT)

பாலக்கோடு பேரூராட்சியில் வார்டு மறுவரையறையை சீராய்வு செய்ய வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் முஸ்லிம்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு முஸ்லிம் மெஹ்தாவியா ஜமாத்தை சேர்ந்த முஸ்லிகள் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

பாலக்கோடு பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. 16679 வாக்காளர்கள் உள்ளனர். இவற்றில் 5 வார்டுகளில் முஸ்லிம் மக்கள் அதிக அளவில் வாக்களிக்கிறார்கள். இதனால் இதுவரை 5 வார்டுகளில் பிரதிநிதித்துவம் கிடைத்து பணிகள் சீராக நடைபெற்று வந்தன.

தற்போது புதியதாக வார்டு மறு வரையறை செய்ததின் காரணமாக முஸ்லிம் மக்கள் வசிக்கும் பகுதிகளில் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காத நிலை ஏற்பட்டு உள்ளது. ஒரு சில வார்டுகளில் 445 முதல் 900 வாக்காளர்களும் சில வார்டுகளில் 1000 முதல் 1500 வாக்காளர்களும் உள்ளனர்.

சீராய்வு

முஸ்லிம் மக்கள் வசிக்கும் வார்டுகளில் அதிக வாக்காளர்கள் இருக்கும் வகையில் வார்டு மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. இந்த மறுவரையறை மக்கள் தொகை, தெருக்கள், வாக்குச்சாவடிகள் அடிப்படையில் அமையவில்லை. இதேபோல் வாக்குச்சாவடிகள் மாற்றப்பட்டுள்ளதால் முதியவர்கள் குடியிருக்கும் இடத்தில் இருந்து அதிக தொலைவில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

இதை கருத்தில் கொண்டு பாலக்கோடு பேரூராட்சியில் வார்டு மறுவரையறை சீராய்வு செய்ய வேண்டும். அதன்மூலம் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதி செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கும் நிலை ஏற்படும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்து உள்ளனர்.



Next Story