பேராவூரணி அருகே நகை திருடிய வீட்டில் மது அருந்திய ஆசாமிகள் பொதுமக்கள் திரண்டதால் தப்பி ஓடினர்


பேராவூரணி அருகே நகை திருடிய வீட்டில் மது அருந்திய ஆசாமிகள் பொதுமக்கள் திரண்டதால் தப்பி ஓடினர்
x
தினத்தந்தி 10 Dec 2019 11:00 PM GMT (Updated: 2019-12-11T00:28:00+05:30)

பேராவூரணி அருகே வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகையை திருடிய ஆசாமிகள் அதே வீட்டில் அமர்ந்து மது அருந்தினர். அப்போது பொதுமக்கள் திரண்டதால் அவர்கள் தங்கள் ஆயுதங்களை வீட்டிலேயே போட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர்.

பேராவூரணி,

தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஏ.வி.நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயபால்(வயது53). ஜெராக்ஸ் கடை உரிமையாளர். இவருடைய மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். நேற்றுமுன்தினம் ஜெயபால் தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவுக்கு சென்றார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி மர்ம ஆசாமிகள் சிலர் நள்ளிரவு 2 மணி அளவில் ஜெயபால் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் பீரோ மற்றும் லாக்கரை உடைத்து உள்ளே இருந்த 15 பவுன் நகையை திருடினர். தொடர்ந்து அவர்கள் வீட்டில் அமர்ந்து மது அருந்திக்கொண்டு இருந்தனர். அப்போது பூட்டிக்கிடந்த வீட்டில் விளக்கு எரிவதை கண்ட அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்து ஜெயபால் வீட்டுக்கு திரண்டு வந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசாமிகள் உடனே வீட்டில் இருந்து சுவர் ஏறி குதித்து தப்பி ஓடி விட்டனர். அப்போது அவர்கள் தாங்கள் பீரோவை உடைக்க கொண்டு வந்திருந்த ஆயுதங்களை வீட்டிலேயே விட்டு சென்று விட்டனர்.

விசாரணை

இது குறித்து பேராவூரணி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் கொள்ளையர்கள் ஓடி சென்ற போது மண்ணில் புதைந்திருந்த அவர்களின் கால்தடத்தை ஆய்வு செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஜெயபால் திருவண்ணாமலையில் இருந்து பேராவூரணிக்கு வந்து வீட்டை பார்த்தார். பின்னர் அவர் இது குறித்து பேராவூரணி போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சென்ற ஆசாமிகளை தேடி வருகிறார்கள். வீட்டில் கதவை உடைத்து நகையை திருடிய ஆசாமிகள் அந்த வீட்டிலேயே அமர்ந்து மது அருந்திவிட்டு தப்பி சென்ற சம்பவம் பேராவூரணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story