உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் - அனைத்துக்கட்சி கூட்டத்தில் தி.மு.க., கம்யூனிஸ்டு கோரிக்கை
தேனி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தேனி,
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கான தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில், தேர்தல் நடத்தை விதிகள், அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய விதிகள் குறித்து கலெக்டர் விளக்கம் அளித்தார். இதில், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சரவணக்குமார், மகாராஜன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதி கள் பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் நடந்த கூட்டத்தில், தேனி மாவட்டத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்று தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். அவர்கள் கூறுகையில், “தேனி மாவட்டம் பரப்பளவில் சிறிய மாவட்டம். 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், ஆண்டிப்பட்டி தொகுதியில் உள்ள ஆண்டிப்பட்டி, கடமலை-மயிலை ஒன்றிய பகுதிகளுக்கு மட்டும் முதற்கட்டமாகவும், மற்ற பகுதிகளில் 2-ம் கட்டமாகவும் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது ஆளும் கட்சிக்கு சாதகமாகவே நடக்க வாய்ப்புள்ளது. எனவே, மாவட்டத்தில் ஊரக பகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும். இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையத்துக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் பரிந்துரை செய்ய வேண்டும்” என்றனர்.
அதற்கு பதிலளித்து கலெக்டர் கூறுகையில், “தேர்தல் நேர்மையான முறையில் நடத்தப்படும். அரசியல் கட்சியினர் தங்களின் கோரிக்கைகளை மனுவாக அளிக்கும் பட்சத்தில் மாநில தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்யப்படும்” என்றார்.
பின்னர் கம்யூனிஸ்டு கட்சிகளின் பிரதிநிதிகள் பேசும் போது, “ஊரக பகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. ஆனால், நகர்புற பகுதிகளிலும் மக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்த அனுமதி கேட்டாலும் தேர்தல் நடத்தை விதியை காரணம் காட்டி அனுமதி மறுக்கப்படுகிறது. அதை சரி செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.
Related Tags :
Next Story