குடியுரிமை திருத்த மசோதாவால் இலங்கை அகதிகளுக்கு பிரச்சினை இல்லை எச்.ராஜா பேட்டி


குடியுரிமை திருத்த மசோதாவால் இலங்கை அகதிகளுக்கு பிரச்சினை இல்லை எச்.ராஜா பேட்டி
x
தினத்தந்தி 12 Dec 2019 11:15 PM GMT (Updated: 12 Dec 2019 7:15 PM GMT)

குடியுரிமை திருத்த மசோதாவால் இலங்கை அகதிகளுக்கு பிரச்சினை இல்லை என எச்.ராஜா தெரிவித்து உள்ளார்.

புதுக்கோட்டை,

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி குறித்து பேசுவதற்காக புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்திற்கு பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா வந்தார். பின்னர் அவர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் இடம்பெற்ற கூட்டணியே தொடரும் எனக்கூறி உள்ளார். அதையொட்டியே தற்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமான முறையில் நடைபெற்று வருகிறது. எங்களது ஒரே குறிக்கோள் தி.மு.க. தலைமையிலான கூட்டணியை வெற்றி பெற அனுமதிக்க கூடாது என்பதே ஆகும். உள்ளாட்சி தேர்தல் குறித்து உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கி உள்ளது. மக்களை சந்திக்க தி.மு.க. அஞ்சுகிறது.

இலங்கை அகதிகளுக்கு பிரச்சினை இல்லை

தேர்தல் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்த போதிலும் அதை நீதிமன்றம் சென்று தடுக்க முயன்ற மு.க.ஸ்டாலினுக்கு தான் மரண அடி. குடியுரிமை சட்ட திருத்த மசோதாவால் இங்கு உள்ள இலங்கை அகதிகளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இங்கு வாழும் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை கொடுத்தால் இலங்கையில் உள்ள தமிழர்களையும் அடித்து விரட்டி விடுவார்கள் என்ற நோக்கில்தான், அவர்களை இச்சட்டத்தில் சேர்க்கவில்லை. இலங்கையில் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய மோடி தலைமையிலான மத்திய அரசு அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

இச்சட்டம் குறித்து தமிழ்நாட்டில் தவறான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளான ப.சிதம்பரம் வைக்கும் குற்றச்சாட்டுகளை நாங்கள் மதிப்பதில்லை. குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு ப.சிதம்பரத்தின் குடும்பமே சிறைக்கு செல்வது உறுதி. பா.ஜ.க.வில் மாநில தலைவர்களை தேர்ந் தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பு இந்த மாதத்திற்குள் வெளியாக உள்ளது. அதன் பின்னர் தமிழக தலைவர் யார் என்பது குறித்து மத்திய தலைமை அறிவிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஓரிரு தினங்களில் வேட்பாளர் பட்டியல்

தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுக்கோட்டையில் உள்ளாட்சி தேர்தலை சந்திப்பதற்காக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அமைந்த கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடர்கிறது. இடைத்தேர்தல் வெற்றியை போல உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். கூட்டணி கட்சிகள் உடனான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு தினங்களில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என்றார்.

முன்னதாக அ.தி.மு.க. சார்பில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story