வருசநாடு அருகே மலைக்கிராமத்தில், ஆழ்துளை கிணற்றில் இருந்து தானாக பொங்கி வெளியேறும் தண்ணீர்


வருசநாடு அருகே மலைக்கிராமத்தில், ஆழ்துளை கிணற்றில் இருந்து தானாக பொங்கி வெளியேறும் தண்ணீர்
x
தினத்தந்தி 12 Dec 2019 10:15 PM GMT (Updated: 12 Dec 2019 10:15 PM GMT)

வருசநாடு அருகே உள்ள மலைக்கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் இருந்து தானாக தண்ணீர் பொங்கி வெளியேறுகிறது.

கடமலைக்குண்டு,

வருசநாடு அருகே சிங்கராஜபுரம் ஊராட்சியில் பண்டாரவூத்து என்ற மலைக்கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கத்தரி, மிளகாய், பீன்ஸ் உள்ளிட்ட விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. கால்நடை வளர்ப்பும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்த கிராமத்திற்கு முக்கிய நீராதாரமாக நீரூற்று ஒன்று இருந்தது. வற்றாமல் காணப்பட்ட இந்த நீரூற்று போதிய அளவில் மழை இல்லாததால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வற்றியது. இதனால் கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயம் பாதிப்படைந்தது.

மேலும் மழை இல்லாததால் கிராமத்தில் அமைக்கப்பட்டு இருந்த ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் வற்றியது. எனவே பொதுமக்கள் வேறு கிராமங்களுக்கு சென்று குடிநீர் பிடித்து வரும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த மாதம் பண்டாரவூத்து கிராம பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்தது. அதன்காரணமாக பண்டாரவூத்து கிராமத்தில் உள்ள அனைத்து ஆழ்துளை கிணறுகளிலும் நீர் மட்டம் உயர்ந்து உள்ளது. இதனால் 10 ஆண்டுகளுக்கு முன்பு வற்றி போன நீரூற்று உள்பட பல இடங்களில் புதிதாக நீரூற்றுகள் தோன்றி உள்ளன. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பண்டாரவூத்து கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவர் அவரது தோட்டத்தில் விவசாய பயன்பாட்டிற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 480 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு அமைத்திருந்தார். தொடர் மழையின் காரணமாக அவரது தோட்டத்தில் இருந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் தானாக பொங்கி வெளியேற தொடங்கி உள்ளது. இதனை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

இதுகுறித்து விவசாயி கணேசன் கூறுகையில், ஆழ்துளை கிணற்றில் இருந்து தானாக வெளியேறும் தண்ணீரின் அழுத்தம் அதிக அளவில் உள்ளதால் மூடி வைத்து அடைக்க முடியவில்லை. எனவே ஆழ்துளை கிணற்றில் இருந்து வெளியேறும் தண்ணீர் அருகில் உள்ள ஓடையில் கலந்து வருகிறது என்றார்.

Next Story