கடலூர், விருத்தாசலத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் - எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக கடலூர், விருத்தாசலத்தில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
கடலூர்,
ஈழத்தமிழர்களின் நலன் காக்கவும், சிறுபான்மையினரான முஸ்லிம் சமுதாயத்தின் உரிமைகளை காக்கவும், மத ரீதியாக நாட்டை கூறுபோடும் மத்திய பாரதீய ஜனதா அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்தும் தி.மு.க.சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
இதன்படி கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க.சார்பில் மஞ்சக்குப்பம் கார் நிறுத்தம் அருகில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசுகையில், மத்திய பாரதீய ஜனதா கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் ஆதரித்து அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர்கள் ஓட்டு போட்டுள்ளனர். அவர்கள் ஓட்டு போடாமல் இருந்திருந்தால், அந்த சட்டம் நிறைவேறி இருக்காது. தங்களை காப்பாற்றி கொள்வதற்காக குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஈழ தமிழர்கள் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. தமிழகத்தில் அ.தி.மு.க. நாடகமாடுகிறது. வருகிற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., பாரதீய ஜனதாவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், இந்த சட்டத்தை உடனே வாபஸ் பெற வேண்டும் என்றார். ரமேஷ் எம்.பி., துரை.கி.சரவணன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ராஜா வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவை தலைவர் தங்கராசு, முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், மாவட்ட பொருளாளர் குணசேகரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சுந்தர், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் நடராஜன், துணை அமைப்பாளர் அகஸ்டின் பிரபாகரன், நகர அவை தலைவர் நாராயணன், நகரபொருளாளர் சலீம், நகர துணை செயலாளர்கள் அஞ்சாபுலி, சுந்தரமூர்த்தி, நகர இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா, மாவட்ட பிரதிநிதிகள் கோவலன், கணேசன், ராமு, கஜேந்திரன், ரெங்கநாதன், ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், குடியுரிமைசட்ட திருத்தத்தை வாபஸ் பெறக்கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
விருத்தாசலம் பாலக்கரையில் கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சபா. ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குழந்தை தமிழரசன், முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக நகர செயலாளர் தண்டபாணி வரவேற்றார். இதில் மாவட்ட துணை செயலாளர் அரங்க பாலகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் குரு சரஸ்வதி, நகர துணை செயலாளர் ராமு, மாவட்ட பிரதிநிதி பாண்டியன், நகர இளைஞரணி அமைப்பாளர் பொன் கணேஷ், மாவட்ட இளைஞரணி கணேஷ்குமார், ஒன்றிய செயலாளர்கள் கனக கோவிந்தசாமி, அமிர்தலிங்கம், நிர்வாகிகள் அறிவுடைய நம்பி, இளையராஜா, பாரிஇப்ராகிம், தில்லைகுமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
முன்னதாக தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்து இருந்தனர். இருப்பினும் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story