திருப்பூரில் கஞ்சா வியாபாரம் செய்த பெண் உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருப்பூரில் கஞ்சா வியாபாரம் செய்த பெண் உள்பட 3 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாநகரில் தனிப்படை அமைக்கப்பட்டு கஞ்சா வியாபாரிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வடக்கு போலீசார் நடத்திய சோதனையில் 3 கிலோ 250 கிராம் கஞ்சாவுடன் திருப்பூர் காலேஜ் ரோட்டை சேர்ந்த வசந்தி(வயது 55), அவருடைய மருமகனான முருகம்பாளையத்தை சேர்ந்த சுரேஷ்(27), பவானி நகரை சேர்ந்த சிவராமன்(25) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இவர்கள் 3 பேரும் கஞ்சா வியாபாரிகள் ஆவார்கள். கைது செய்யப்பட்டவர்களை கோவை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். மேற்கண்ட 3 பேரும் தொடர்ந்து கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தது போலீசாருக்கு தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து திருப்பூர் வடக்கு உதவி கமிஷனர் வெற்றிவேந்தன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் ஆகியோர் துணை கமிஷனர் பத்ரி நாராயணன் மேற்பார்வையில், மேற்கண்ட 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர்.
இந்தநிலையில் போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் உத்தரவின் பேரில் வசந்தி, சுரேஷ், சிவராமன் ஆகிய 3 பேரையும் திருப்பூர் வடக்கு போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து அதற்கான உத்தரவு நகலை சிறையில் உள்ள 3 பேரிடம் வழங்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story