அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் 5,03,746 வாக்காளர்கள் கலெக்டர் தகவல்


அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் 5,03,746 வாக்காளர்கள் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 23 Dec 2019 10:45 PM GMT (Updated: 23 Dec 2019 7:46 PM GMT)

அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் 5,03,746 வாக்காளர்கள் உள்ளதாக கலெக்டர் ரத்னா தெரிவித்தார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் ரத்னா அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நேற்று வெளியிட் டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 1,25,219 ஆண் வாக்காளர்களும், 1,25,115 பெண் வாக்காளர்களும், 5 திருநங்கை வாக்காளர்களும் என மொத்தம் 2,50,339 வாக்காளர்கள் உள்ளனர்.

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 1,25,908 ஆண் வாக்காளர்களும், 1,27,497 பெண் வாக்காளர்களும், 2 திருநங்கை வாக்காளர்களும் என மொத்தம் 2,53,407 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தத்தில் அரியலூர் மாவட்டத்தில் 5,03,746 வாக்காளர்கள் உள்ளனர்.

திருத்தம்

இந்திய தேர்தல் ஆணையம் 1.1.2020-ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்துள்ள அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர்நீக்கல், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளவும் அடுத்த மாதம் (ஜனவரி) 22-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெற ஆணையிட்டுள்ளது. மேலும் அடுத்த மாதம் 4, 5, மற்றும் 11, 12-ந்தேதிகளில் சிறப்பு முகாம்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும். மேற்கண்ட பணிகள் முடிவுற்று வருகிற பிப்ரவரி மாதம் 14-ந்தேதியன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

இதனால் 1.1.2020 அன்று 18 வயது பூர்த்தியடையும் அனைத்து தகுதியுள்ள நபர்களும் தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம் மற்றும் பெயர் நீக்கல் போன்றவற்றிற்கான விண்ணப்பங்களை சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளித்தும் பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி (பொறுப்பு) பாலாஜி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பூங்கோதை, தாசில்தார்கள் கண்ணன் (தேர்தல்), குமரய்யா (ஆண்டிமடம்) ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story