துறையூர் பகுதியில் வேர் அழுகல் நோயால் வெங்காய உற்பத்தி பாதிப்பு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை


துறையூர் பகுதியில் வேர் அழுகல் நோயால் வெங்காய உற்பத்தி பாதிப்பு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 23 Dec 2019 11:00 PM GMT (Updated: 23 Dec 2019 8:14 PM GMT)

துறையூர் பகுதியில் வேர் அழுகல் நோயால் வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

துறையூர்,

துறையூர் பகுதிக்கு உட்பட்ட செங்காட்டுப்பட்டி, கீரம்பூர், செல்லிபாளையம், நாகலாபுரம், வைரிசெட்டிபாளையம், ரெங்கநாதபுரம், மருவத்தூர், குன்னுப்பட்டி, முருகூர் ஆகிய பகுதிகளில் பெருமளவில் விவசாயிகள் வெங்காயம் பயிரிட்டு உள்ளனர்.

தற்போது பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக பெரும்பாலான வயல்களில் மழைநீர் தேங்கியதால் வெங்காய பயிரில் வேர் அழுகல் நோய் ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில் சுமார் 1000 ஏக்கருக்கு மேல் வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

இழப்பீடு

இதுகுறித்து விவசாயிகள் சிலர் கூறியதாவது:-

வெங்காயம் உற்பத்தி செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை செலவு ஆகிறது. தற்போது பெரும்பாலான வயல்களில் வேர் அழுகல் நோய் ஏற்பட்டுள்ளதால் ஏக்கருக்கு 2 முதல் 3 மூட்டை வெங்காயம் கிடைப்பதே அரிதாக உள்ளது. தற்போது வெங்காயத்திற்கு நல்ல விலை கிடைக்கிறது. ஆனால், நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். கடந்த ஆண்டுகளில் நல்ல உற்பத்தி இருந்தது. ஆனால், போதிய விலை கிடைக்கவில்லை. தற்போது வெங்காய பயிரில் வேர் அழுகல் நோயால் எங்களது வாழ்வாதாரமே கேள்விக்குறியாக உள்ளது. ஆகவே, பாதிக்கப்படட அனைத்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story