ஆற்காட்டில், வீட்டின் பூட்டை உடைத்து ரூ.6½ லட்சம் நகை, பணம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


ஆற்காட்டில், வீட்டின் பூட்டை உடைத்து ரூ.6½ லட்சம் நகை, பணம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 24 Dec 2019 10:30 PM GMT (Updated: 24 Dec 2019 5:14 PM GMT)

ஆற்காட்டில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.6½ லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ரூ.30 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆற்காடு,

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதி 1-ல் வசித்து வருபவர் தினகரன் (வயது 38). இவர் வாலாஜாவை அடுத்த பூண்டி கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராணிப்பேட்டையில் உள்ள ‌ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில் சம்பவத்தன்று காலை வீட்டை பூட்டி விட்டு குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்றுள்ளனர். பின்னர் மீண்டும் மதியம் குழந்தைகளை அழைத்துக்கொண்டு தினகரனின் மனைவி வீட்டிற்கு வந்தார்.

அப்போது வீட்டின் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்றபோது கதவின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. மேலும் பீரோ உடைக்கப்பட்டு திறந்த நிலையில் கிடந்தது.

பீரோவில் வைத்திருந்த வளையல்கள், தங்க சங்கிலி, அட்டிகை உள்பட 26 பவுன் நகைகள், கால் கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.30 ஆயிரம் மற்றும் செல்போன், கேமரா ஆகியவை கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது. கொள்ளை போன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.6½ லட்சம் ஆகும்.

இதுகுறித்து தினகரன் ஆற்காடு டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story