போலி ஆவணங்களை கொடுத்து ரூ.3 கோடி கடன் பெற்றதாக புகார்: தொழிலதிபரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை


போலி ஆவணங்களை கொடுத்து ரூ.3 கோடி கடன் பெற்றதாக புகார்: தொழிலதிபரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 29 Dec 2019 4:15 AM IST (Updated: 29 Dec 2019 3:46 AM IST)
t-max-icont-min-icon

போலி ஆவணங்களை கொடுத்து ரூ.3 கோடி கடன் பெற்றதாக வந்த புகாரின் பேரில் திருப்பூர் தொழிலதிபரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனால் திருப்பூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பூர், 

திருப்பூர் ஊத்துக்குளி ரோடு என்.ஜி.ஆர். கார்டனை சேர்ந்தவர் துரை என்ற துரைசாமி (வயது 50). இவர் பின்னலாடை நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும், பல்வேறு தொழில்களும் செய்து வருகிறார். தொழிலதிபரான இவர் தேசிய வங்கி ஒன்றில் பல்வேறு ஆவணங்களை கொடுத்து ரூ.13 கோடி கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

இதே ஆவணங்களை கொடுத்து மற்றொரு வங்கியிலும் ரூ.3 கோடி கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து தொழிலதிபர் துரைசாமி கொடுத்த ஆவணங்களை வங்கியின் மேலாளர் சரி பார்த்துள்ளார். அப்போது அந்த ஆவணங்கள் போலியானது என தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வங்கி மேலாளர் இது குறித்து சென்னையில் உள்ள சி.பி.ஐ. போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் சி.பி.ஐ.போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த சென்னையை சேர்ந்த சி.பி.ஐ. அதிகாரிகள் 6 பேர் நேற்று திருப்பூருக்கு காரில் வந்தனர். அவர்கள் காலை 9 மணி அளவில் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள துரைசாமியின் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்தனர். இவர்களுக்கு துணையாக உள்ளூர் போலீசாரும் சென்றனர்.

அங்கு வீட்டில் இருந்த துரைசாமி மற்றும் அவருடைய குடும்பத்தினரிடம் காலையில் இருந்து மாலை 5 மணி வரை விசாரணை நடத்தினர். பின்னர் வீட்டில் இருந்து சில ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றி எடுத்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் துரைசாமி தனது செல்போனை பயன்படுத்த போலீசார் அனுமதிக்கவில்லை. இதற்கிடையே இந்த சோதனை குறித்த எந்த விவரமும் சி.பி.ஐ. போலீசார் தெரிவிக்காமல் சென்றுவிட்டார்கள். எந்த பகுதியில் உள்ள வங்கியில் அவர் ரூ.13 கோடி கடன் வாங்கியுள்ளார்.

அதற்கு என்னென்ன ஆவணங்கள் கொடுத்துள்ளார். மேலும், மீண்டும் அதே ஆவணங்களை வைத்து எந்த வங்கியில் கடன் பெற்றார் என்பது குறித்த எந்த விவரங்களும் தெரிவிக்கப்படவில்லை. ஆவணங்கள் முழுமையாக ஆய்வு செய்த பிறகே இது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தெரியவரும். சென்னையில் இருந்து போலீசார் வந்ததால் சென்னையில் உள்ள வங்கியில் கடன் வாங்கினாரா? என பலரும் சந்தேகித்து வருகிறார்கள். இருப்பினும் தொழிலதிபர் ஒருவர் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய இந்த சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story