பெங்களூருவில் திருட்டு, கொள்ளை வழக்குகளில் : தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்பட 70 பேர் கைது


பெங்களூருவில் திருட்டு, கொள்ளை வழக்குகளில் : தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்பட 70 பேர் கைது
x
தினத்தந்தி 1 Jan 2020 5:30 AM IST (Updated: 1 Jan 2020 5:14 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில், திருட்டு, கொள்ளை உள்பட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்பட 70 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.1.48 கோடி நகை-பணம் உள்பட ஏராளமான பொருட்கள் மீட்கப்பட்டன. பெங்களூருவில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்களை தென்கிழக்கு மண்டல போலீசார் கைது செய்தனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

பெங்களூரு, 

பெங்களூருவில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்ததாக தமிழகத்தை சேர்ந்த 5 பேரை மடிவாளா போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் தமிழ்நாடு சேலம் மாவட்டம் வாழப்பாடி தாலுகா அனுபுரத்தை சேர்ந்த மனோகர் (வயது 21), மேட்டிபேட்டையை சேர்ந்த லோகநாதன் (19), கார்த்திக் (19), சூர்யா (19), கோகுல்நாதன் (19) என்பது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பிலான 15 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டது.

அதேபோல் திருட்டில் ஈடுபட்டு வந்த திருச்சியை சேர்ந்த 6 பேர் கோரமங்களா போலீசாரிடம் சிக்கினர். அவர்களை கைது செய்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் தமிழ்நாடு திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா மலைக்கோட்டையை சேர்ந்த தினு ஆனந்த் (23), சேதுராமன் (20), பிரவீன் (23), புங்கலூரு ஹரிபாஸ்கர் காலனியை சேர்ந்த விக்னேஷ் (23), தொட்டியம் தாலுகா அலகரை பகுதியை சேர்ந்த சரண் ராஜ் (23) மற்றும் திருச்சி காவேரி ரோடு ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த ராம் (36) என்பது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ரூ.8.10 லட்சம் மதிப்பிலான 25 மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் வாகன திருட்டில் ஈடுபட்டதாக எலெக்ட்ரானிக் சிட்டி போலீசார் 6 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா இம்முடி நாயகனபள்ளியை சேர்ந்த முனியப்பா (54), மகேஷ் (25), மரிகவுடா (28), ஓசூர் சாந்தி நகரை சேர்ந்த முனிவெங்கடேஷ் (24), சேலம் டவுன் செவ்வாய்பேட்டையில் வசித்து வரும் ராஜஸ்தானை சேர்ந்த ஹரீஷ் (31), பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா தாசனபுராவை சேர்ந்த ராகவேந்திரன் (30) என்பது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ரூ.41 லட்சம் மதிப்பிலான லாரி மீட்கப்பட்டது.

இவர்கள் உள்பட பெங்களூருவில் திருட்டு, கொள்ளை, போதைப்பொருள் விற்பனை உள்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாக மொத்தம் 70 பேரை தென்கிழக்கு மண்டல போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் இருந்து 1 கிலோ 72 கிராம் தங்க நகைகள், 975 கிராம் வெள்ளி பொருட்கள், ரூ.10.88 லட்சம் ரொக்கம், 31 செல்போன்கள், 66 கிலோ 250 கிராம் கஞ்சா, 26 மடிக்கணினிகள், 31 மோட்டார் சைக்கிள்கள், 1 ஆட்டோ, 2 கார்கள், ஒரு லாரி ஆகியவை மீட்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ.1.48 கோடியாகும். இதன்மூலம் மொத்தம் 55 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.

Next Story