குமரி சப்–இன்ஸ்பெக்டர் கொலை எதிரொலி: 14 சோதனைச்சாவடிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு; துப்பாக்கிகளுடன் 5 போலீசார் நியமனம்
குமரி சோதனை சாவடியில் சப்–இன்ஸ்பெக்டர் கொலையை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள 14 சோதனைச்சாவடிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் துப்பாக்கிகளுடன் 5 போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நாகர்கோவில்,
தமிழக– கேரள எல்லையில் குமரி மாவட்டம் களியக்காவிளை சந்தை ரோட்டில் ஒரு சோதனைச்சாவடி உள்ளது. இந்த சோதனைச் சாவடியில் கடந்த 8–ந் தேதி இரவு களியக்காவிளை போலீஸ் நிலைய சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் வில்சன் (வயது 57) பணியில் இருந்தார். இரவு 9.30 மணிக்கு அங்கு வந்த 2 பேர் அவரை துப்பாக்கியால் சுட்டும், வெட்டுக் கத்தியால் வெட்டியும் கொலை செய்துவிட்டு, தப்பிச்சென்றனர்.
இருமாநில எல்லையில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவம் தமிழகம் மற்றும் கேரள மாநில உயர் போலீஸ் அதிகாரிகள் முதல் சாதாரண போலீசார் வரை அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது.
இந்த கொலை தொடர்பாக அப்பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தபோது, கொலையாளிகள் 2 பேரும் குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டைச் சேர்ந்த அப்துல் சமீம் (32), நாகர்கோவில் இளங்கடையைச் சேர்ந்த தவுபிக் (29) ஆகியோர் என்பதும், இவர்கள் 2 பேரும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்பதும் தெரிய வந்தது.
இதுதொடர்பான அறிவிப்பை தமிழக, கேரள மாநில போலீசார் வெளியிட்டனர். அத்துடன் பயங்கரவாதிகள் பற்றிய விவரங்களை தெரிவித்தால் சன்மானமும் வழங்கப்படுவதாக அறிவித்தனர்.
வழக்கமாக சோதனைச்சாவடியில் 2 போலீசார் பணியில் இருப்பார்கள். ஆனால் கொலை நடந்த அன்று வில்சன் மட்டுமே பணியில் இருந்துள்ளார். அவரை பயங்கரவாதிகள் எளிதாக கொலை செய்வதற்கு சோதனைச்சாவடியில் போதிய போலீசார் பணியில் அமர்த்தப்படாததும், போலீசாருக்கு துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் எதுவும் வழங்கப்படாததும் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் கொலை நடந்த சோதனைச்சாவடி எவ்வித வசதியும் இன்றி அமைக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது உயர் அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து குமரி மாவட்ட சோதனைச்சாவடிகள் அனைத்திலும் பாதுகாப்பை அதிகரிக்கவும், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்ளவும் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து வில்சன் படுகொலை செய்யப்பட்ட களியக்காவிளை சந்தை ரோடு சோதனைச் சாவடியில் கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சப்–இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் 5 போலீசார் துப்பாக்கி ஏந்தியவாறு பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இதேபோல் திருவனந்தபுரம்– நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் களியக்காவிளையில் உள்ள சோதனைச் சாவடியில் சப்–இன்ஸ்பெக்டர் சோபனராஜ் தலைமையில் 5 போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கும் துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன.
களியக்காவிளை– கொல்லங்கோடு சாலையில் கோழவிளை சோதனைச் சாவடியில் சப்–இன்ஸ்பெக்டர் ஜோசப்ராஜ் தலைமையில் 5 போலீசார் துப்பாக்கிகளுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாகர்கோவில்– திருநெல்வேலி சாலையில் ஆரல்வாய்மொழியில் உள்ள சோதனைச் சாவடியிலும் 5 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன.
மாவட்டம் முழுவதும் மொத்தம் 14 சோதனைச் சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் தலா 5 போலீசார் பணியமர்த்தப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து சோதனைச்சாவடிகளிலும் உள்ள போலீசாருக்கு துப்பாக்கிகளும் வழங்கப்பட்டுள்ளன.