திருச்சியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - தாயின் 2–வது கணவர் கைது


திருச்சியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - தாயின் 2–வது கணவர் கைது
x
தினத்தந்தி 25 Jan 2020 10:45 PM GMT (Updated: 25 Jan 2020 8:07 PM GMT)

திருச்சியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, அந்த சிறுமியுடைய தாயின் 2–வது கணவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

திருச்சி,

திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் இருந்து சைல்டுலைன் திட்ட ஒருங்கிணைப்பாளர் முரளிகுமாருக்கு போன் மூலம் ஒரு அழைப்பு வந்தது. அதில், ‘‘தங்கள் பள்ளியில் 2–ம் வகுப்பு படித்து வரும் 8 வயது மாணவியை அவருடைய தந்தை சூடு வைத்து சித்ரவதை செய்ததுடன், பாலியல் தொந்தரவு செய்துள்ளார்’’ என்று தெரிவித்துள்ளனர்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனே அந்த பள்ளிக்கு சென்று, பாதிக்கப்பட்ட மாணவியை அழைத்து விசாரணை நடத்தினார். அப்போது அந்த மாணவியின் உடலில் சூடு வைத்ததற்கான அடையாளம் இருந்தது. உடனே இது குறித்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.

அதன்பேரில், பாதிக்கப்பட்ட மாணவியின் வீட்டுக்கு ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயா நேரில் சென்று, மாணவியின் தாயாரிடம் விசாரித்தார். அப்போது அவர் போலீசாரிடம், ‘‘பாதிக்கப்பட்ட மாணவி எனது முதல் கணவருக்கு பிறந்தவள். எனது முதல் கணவர் இறந்து விட்டதால், நான், கூலித்தொழிலாளியான சாமிநாதன் (வயது 24) என்பவரை 2–வது திருமணம் செய்து கொண்டேன். எனது மகளை சாமிநாதன் பாலியல் தொந்தரவு செய்து சூடு வைத்தார். இதை நான் கண்டித்தபோது, என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டினார்’’ என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியின் தாயின் 2–வது கணவரான சாமிநாதன் மீது ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story