பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்ற ஒடிசாவில் பயிற்சி பெற்ற 70 தொழிலாளர்கள் திருப்பூர் வருகை


பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்ற ஒடிசாவில் பயிற்சி பெற்ற 70 தொழிலாளர்கள் திருப்பூர் வருகை
x
தினத்தந்தி 27 Feb 2020 4:15 AM IST (Updated: 27 Feb 2020 3:01 AM IST)
t-max-icont-min-icon

பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்ற ஒடிசாவில் பயிற்சி பெற்ற 70 தொழிலாளர்கள் திருப்பூருக்கு வந்துள்ளனர்.

திருப்பூர்,

திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். வேலைவாய்ப்பு அதிகமாக இருந்து வருவதால், திருப்பூருக்கு தினமும் பலர் வேலை தேடி வந்து கொண்டிருக்கிறார்கள். தொழில்துறையினருக்கும் தொழிலாளர்கள் பற்றாக்குறையாக இருந்து வருவதால் உடனே அவர்களை வேலைக்கு சேர்த்து விடுகிறார்கள்.

இந்நிலையில் ஒடிசாவில் இருந்து திருப்பூருக்கு வருகிற தொழிலாளர்களுக்காக, ஒடிசாவில் இருந்து புலம்பெயர்ந்து வரும் தொழிலாளர்களுக்கான சேவை மையம் செயல்பட்டு வந்து கொண்டிருக்கிறது. இந்த சேவை மையம் தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே தற்போது ஒடிசாவில் பயிற்சி பெற்ற 70 தொழிலாளர்கள் திருப்பூருக்கு வந்துள்ளனர்.

இது குறித்து ஒடிசாவில் இருந்து புலம்பெயர்ந்து வரும் தொழிலாளர்களுக்கான சேவை மைய மேலாளர் ராமசாமி கூறியதாவது:- ஒடிசாவில் இருந்து திருப்பூருக்கு வேலை தேடி வருகிறவர்களை திறன் மிகுந்த தொழிலாளர்களாக அனுப்ப ஒடிசா அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதன்படி தீன் தயாள் உபாத்யாய கிராமின் கவுசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் ஒடிசா மாநிலத்தில் பயிற்சி பெற்று தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் வேலைக்கு பலர் வந்து கொண்டிருக்கிறார்கள்.

தற்போது திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்ற 70 பேர் ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள திறன் மேம்பாட்டு நிறுவனத்தில் பயிற்சி பெற்று வந்தனர். அவர்களை திருப்பூர் ரெயில் நிலையத்தில் வரவேற்று அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டது. அவர்கள் பணிபுரியம் இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story