ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் பகல் கனவு பலிக்காது ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் பகல் கனவு பலிக்காது ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
x
தினத்தந்தி 5 March 2020 12:30 AM GMT (Updated: 4 March 2020 9:09 PM GMT)

ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் பகல் கனவு பலிக்காது என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

கிரு‌‌ஷ்ணகிரி,

கிரு‌‌ஷ்ணகிரியில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் தலைமை தாங்கி துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:- இந்த விழா கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்திற்கு மட்டுமல்ல. தமிழ்நாட்டு மக்களுக்கே உரிய விழாவாகும். தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் 11 புதிய அரசு மருத்துவக்கல்லூரிகளை தொடங்க மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதன் மூலம் ஏழை, எளிய மக்களும் மருத்துவ படிப்பை படிக்கும் நிலை உருவாகி உள்ளது. ராமநாதபுரம், விருதுநகரை தொடர்ந்து இன்றைய தினம் கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் விழா நடந்துள்ளது.

இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு ஒரு மருத்துவக்கல்லூரியே கிடைக்க கூடிய நிலை பெரிய வி‌‌ஷயமாக உள்ள நிலையில் தமிழக அரசு இந்த ஆண்டில் 11 மருத்துவக்கல்லூரிகளை பெற்று தந்துள்ளது. மேலும் அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டு பணிகளும் தொடங்கப்பட உள்ளன. 11 புதிய மருத்துவக்கல்லூரிகளை தமிழ்நாட்டிற்கு ஒதுக்கியதுடன் ரூ.3,575 கோடி நிதியை மத்திய அரசு அனுமதித்துள்ளது. மாநில அரசும் 1,200 கோடி நிதியை ஒதுக்கி பணிகள் தொடங்கப்படுகின்றன.

பகல் கனவு பலிக்காது

தமிழ்நாட்டிற்கு 11 மருத்துவக்கல்லூரிகளை அனுமதித்த பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றது முதல் 9 ஆண்டுகளில் நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்படி எண்ணற்ற திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தி வரும் இந்த வேளையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தவறான தகவலை மக்களிடம் பரப்பி வருகிறார்கள்.

எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்பதற்காக உண்மைக்கு மாறான தகவல்களை தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். எந்த காலத்திலும் அ.தி.மு.க.வை வெற்றி பெற கூடிய சக்தி எந்த கட்சிக்கும் கிடையாது. காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் பகல் கனவு பலிக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story