கழிவுகளை கடலில் கலக்க விட்ட விவகாரம் கன்னியாகுமரியில் 9 விடுதிகள் மீது நடவடிக்கை


கழிவுகளை கடலில் கலக்க விட்ட விவகாரம் கன்னியாகுமரியில் 9 விடுதிகள் மீது நடவடிக்கை
x
தினத்தந்தி 8 March 2020 5:30 AM IST (Updated: 8 March 2020 3:56 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் கழிவுகளை கடலில் கலக்க விட்ட 9 விடுதிகளின் கழிவுநீர் குழாய்களை மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கன்னியாகுமரி,

உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இவர்கள் கன்னியாகுமரியில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்து கடல் அழகை ரசித்துவிட்டு செல்வது வழக்கம். இந்த விடுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை கழிவறை கிணறுகளில் செலுத்த வேண்டும் என்று விதிமுறை உள்ளது.

ஆனால், சில விடுதிகள் கழிவுகளை குழாய் மூலம் கடலுக்குள் செலுத்துவதாக தெரிகிறது. இதனால், கடல் நீர் மாசு அடைவதுடன், மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு பலவித நோய் ஏற்படுவதாக புகார் எழுந்தது. மேலும், மாசு காரணமாக மீன்கள் செத்து மிதப்பதாகவும் அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

போராட்டம்

இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த 4 நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி பகுதியில் மீனவர்கள், அலங்கார உபகார மாதா திருத்தல பங்கு பேரவை நிர்வாகிகள் கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

அப்போது கன்னியாகுமரியில் உள்ள விடுதிகளில் சோதனை நடத்தப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.

அதிரடி சோதனை

அதன்படி கன்னியாகுமரி பகுதியில் உள்ள விடுதிகளில் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். குமரி மாவட்ட பேரூராட்சிகளின்உதவி இயக்குனர் கண்ணன், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் சத்திய தாஸ், சுகாதார அதிகாரி முருகன், இளநிலை உதவியாளர் சண்முகசுந்தரம், எபநேசர், உதவி செயற்பொறியாளர் வில்லியம் ஜெயராஜ் மற்றும் அதிகாரிகள் விடுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

சுமார் 50 விடுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 9 விடுதிகளில் கழிவறை கிணறு இல்லாமல் இருப்பதும், அவற்றின் கழிவுகள் குழாய்கள் மூலம் கடலுக்குள் செலுத்துவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து குழாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என 9 விடுதிகளுக்கும் அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்தனர். ஆனால், விடுதி உரிமையாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத்தெரிகிறது.

சீல் வைப்பு

இந்த நிலையில் நேற்று எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்ட 9 விடுதிகளில் அமைக்கப்பட்டிருந்த கழிவுநீர் குழாய்களை அதிகாரிகள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் மூடி சீல் வைத்தனர்.

இதுபோன்ற சோதனை தொடர்ந்து நடைபெறும் என்றும் கழிவறை கிணறு இல்லாத விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகளின் நடவடிக்கையால் அந்த பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
1 More update

Next Story