மாணவி மர்ம சாவு: தனியார் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர்- உறவினர்கள் சாலை மறியல்


மாணவி மர்ம சாவு: தனியார் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர்- உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 10 March 2020 6:00 AM IST (Updated: 10 March 2020 1:27 AM IST)
t-max-icont-min-icon

கல்லக்குடி அருகே மாணவி மர்ம சாவு தொடர்பாக தனியார் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து பெண்கள் உள்பட 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

கல்லக்குடி,

அரியலூர் மாவட்டம் அயன்சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மகள் ரேகா(வயது 16). இவர் திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் கோவண்டாகுறிச்சி ஊராட்சி வடுகர்பேட்டையில் உள்ள புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி, அப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த மாதம் 19-ந் தேதியன்று இவரை காணவில்லை என்று பள்ளி நிர்வாகம் ரேகாவின் சகோதரர் கருப்பையாவிற்கு தகவல் கொடுத்தது. இதையறிந்த அவருடைய பெற்றோர் வடுகர்பேட்டைக்கு வந்து பல இடங்களில் விசாரித்தும், ரேகா பற்றி தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர்கள், கல்லக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு தங்களது ஊருக்கு சென்றனர்.

இந்நிலையில், வடுகர்பேட்டையில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் ரெயிலில் அடிபட்டு ரேகா இறந்து கிடப்பதாகவும், அவருடைய பள்ளி சீருடை மற்றும் அடையாள அட்டையை வைத்து அடையாளம் கண்டதாகவும், ரேகாவின் பெற்றோருக்கு கல்லக்குடி போலீசார் தகவல் கொடுத்துள்ளனர். இதனால் ரேகாவின் பெற்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தங்களது மகளின் உடலை கண்டு கதறி அழுதனர். இது குறித்து தகவல் அறிந்த அரியலூர் ரெயில்வே போலீசார், அங்கு விரைந்து வந்து ரேகாவின் உடலை கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் ரேகாவின் உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து அரியலூர் ரெயில்வே போலீசாரும், கல்லக்குடி போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலை மறியல்

இந்த சம்பவம் நடைபெற்று 20 நாட்கள் ஆன நிலையில் ரேகாவின் பெற்றோர் மற்றும் வேப்பங்குழி, கள்ளூர், அயன்சுத்தமல்லி கிராமங்களை சேர்ந்த அவர்களுடைய உறவினர்கள் என சுமார் 200 பேர் நேற்று காலை திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் வடுகர்பேட்டையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி முன்பு ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, மாணவி ரேகா மர்மமான முறையில் இறந்தது பற்றி போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும், விடுதியில் இருந்து ரேகா வெளியேறியது பற்றி பள்ளி நிர்வாகம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரியும், பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும் கைகளில் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இது பற்றி தகவல் அறிந்து லால்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜசேகர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சதீஸ்குமார், ராமலிங்கம் மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட சுமார் 200 பேரை கைது செய்து, தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் லால்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜசேகர், மாணவி ரேகா சாவு தொடர்பாக இன்னும் 10 நாட்களில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து ரேகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சாலை மறியலால் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

1 More update

Next Story