பீடிக்காக தொழிலாளி படுகொலை தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொன்றவர் கைது


பீடிக்காக தொழிலாளி படுகொலை தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொன்றவர் கைது
x
தினத்தந்தி 10 March 2020 12:25 AM GMT (Updated: 2020-03-10T05:55:40+05:30)

கிருமாம்பாக்கம் அருகே பீடிக்காக தலையில் கல்லை போட்டு தொழிலாளி படுகொைல செய்யப்பட்டார். இதுதொடர்பாக கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

பாகூர்,

கடலூர் வன்னியர்பாளையம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் டேனியல்(வயது 52). ேசத்தியாதோப்பில் உள்ள டயர் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்தார். மது குடிக்கும் பழக்கம் உடையவர். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். உடல்நிலை சரியில்லாததால் கடந்த சில நாட்களாக தேவனாம்பட்டினத்தில் உள்ள மூத்த மகள் சித்ரா வீட்டில் இருந்து வந்தார்.

அவ்வப்போது கன்னியகோவில் பகுதிக்கு வந்து மது குடித்து விட்டு செல்வது வழக்கம். இதேபோல் நேற்று முன்தினம் மாலை தனது மகளிடம் கோவிலுக்கு செல்வதாக கூறி விட்டு மது குடிக்க டேனியல் கன்னியகோவில் வந்துள்ளார்.

கொலை

அதன்பிறகு அவர் வீட்டுக்கு வரவில்லை. இந்தநிலையில் அங்குள்ள பச்சைவாழியம்மன் கோவில்- ராமர்கோவில் இடையே புதரில் தலைகுப்புற கவிழ்ந்த நிலையில் பிணமாக கிடந்ததை நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். இதுபற்றி அவர்கள் கிருமாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன், கிருமாம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் வடிவழகன், மணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது தலையில் கல்லை தூக்கிப்போட்டு டேனியல் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

குடிபோதையில் தகராறு

துப்பறிவதற்காக போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி அருகில் உள்ள சாராயக்கடைக்கு சென்றது. அங்கிருந்து மீண்டும் டேனியல் உடல் கிடந்த இடத்திற்கு வந்து நின்று விட்டது. தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். இதன்பின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் டேனியல் குடிபோதையில் அங்குள்ள கோவில் வளாகத்தில் படுத்திருந்தார். நள்ளிரவு அங்கு வந்த வாலிபர் அவருடன் தகராறு செய்துள்ளார்.

அப்போது ஆத்்திரமடைந்து டேனியல் தலையில் கல்லை போட்டு அந்த வாலிபர் கொலை செய்தது தெரியவந்தது. குற்றவாளியை அடையாளம் காணும் வகையில் அந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்வையிட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.

கட்டிட தொழிலாளி கைது

அப்போது பிள்ளையார்குப்பம் நாடார் தெருவை சேர்ந்த கட்டிட தொழிலாளி ராஜாராம்(41) என்பவர் டேனியலை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், நேற்று முன்தினம் இரவு கன்னியகோவிலில் உள்ள சாராயக்கடைக்கு மது குடிக்க சென்றுள்ளார். மது குடித்து விட்டு இரவு 11 மணியளவில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். பச்சைவாழியம்மன் கோவில் அருகே வந்தபோது அங்கு டேனியல் குடிபோதையில் படுத்திருந்தார்.

இதனை பார்த்த ராஜாராம் பீடி இருக்கும் என்று நினைத்து அவரது சட்டைப் பையில் கையை விட்டுள்ளார். அப்போது கண்விழித்த டேனியல் அவரை திட்டியுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து சென்ற டேனியல் அருகில் சிறுநீர் கழித்துக்கொண்டு இருந்தார். அப்போது அருகில் கிடந்த கல்லை எடுத்து டேனியலின் தலையில் போட்டு தாக்கினார். இதில் மயங்கி விழுந்த அவரை அப்படியே போட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். படுகாயமடைந்த டேனியல் சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்துள்ளார். கைதான ராஜாராமிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பீடிக்காக நடந்த இந்த கொலை சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story