கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் கட்டிட மேஸ்திரி பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை மனைவி, மகள் உள்பட 3 பேர் கைது


கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் கட்டிட மேஸ்திரி பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை மனைவி, மகள் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 13 March 2020 12:15 AM GMT (Updated: 2020-03-13T01:39:11+05:30)

கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் கட்டிட மேஸ்திரியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த மனைவி, மகள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேந்தமங்கலம்,

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள புதன்சந்தை ஜீவா நகரை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 45), கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி அங்கம்மாள் (40). இவர்களுடைய மகள் சாந்தி (20).

நேற்று அதிகாலை அங்கம்மாள் தனது மகள் சாந்தியை அழைத்து கொண்டு அதே பகுதியில் உள்ள தனது தாயார் எல்லம்மாள் (65) வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து கந்தசாமி அவரது வீட்டின் வெளியே தனியாக படுத்து தூங்கி கொண்டிருந்தார்.

பெட்ரோல் ஊற்றி எரித்தனர்

இதனிடையே அங்கு வந்த மர்மநபர்கள் சிலர் திடீரென்று கந்தசாமியின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். இதில் அவர் வலியால் அலறி துடித்தார். அவரின் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததில் அவர் பலத்த தீக்காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

சிறிது நேரத்தில் அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து தீக்காயம் அடைந்த கந்தசாமியை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி கந்தசாமி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கள்ளக்காதல்

இந்த கொலை சம்பவம் குறித்து களங்காணி கிராம நிர்வாக அலுவலர் பிரபா சேந்தமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சேந்தமங்கலம் (பொறுப்பு) போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து கொலையுண்ட கந்தசாமியின் மனைவி அங்கம்மாள், மகள் சாந்தி ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதில் அங்கம்மாள், தனது தாயார் மற்றும் மகள் ஆகியோருடன் சேர்ந்து தனது கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அங்கம்மாள், மகள் சாந்தி, தாயார் எல்லம்மாள் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைதான அங்கம்மாள் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

கட்டிட மேஸ்திரியான எனது கணவர் கந்தசாமிக்கும் அவர் வேலை செய்த இடத்தில் சேலத்தை சேர்ந்த சரோஜா என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதை கைவிடுமாறு பல முறை அவரிடம் கூறியும், அவர் கேட்காமல் இருந்து வந்தார். அத்துடன் சரோஜாவுடன் தனியாக வாழ விரும்பி சொத்தை எங்களிடம் பிரித்து கொடுக்கும்படி அடிக்கடி வற்புறுத்தி வந்தார்.

கைது

இதனால் எங்களது குடும்பம் பாழாகிவிடும் என்பதால் மகள் மற்றும் எனது தாயார் எல்லம்மாள் ஆகியோருடன் சேர்ந்து எனது கணவரை கொலை செய்ய திட்டமிட்டோம். இதையடுத்து சம்பவத்தன்று தனியாக வீட்டின் முன்பு தூங்கி கொண்டிருந்த கந்தசாமியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றோம்.

இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும கந்தசாமி மீது தீ வைத்த பிறகும் ஆத்திரம் தீராத அங்கம்மாள், சாந்தி மற்றும் எல்லம்மாள் ஆகியோர் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த 2 மோட்டார்சைக்கிளுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். மேலும் வீட்டின் ஒரு பகுதிக்கும் தீ வைக்கப்பட்டது. இதில் 2 மோட்டார் சைக்கிள்களும் எரிந்து சேதம் அடைந்ததோடு வீட்டின் ஒரு பகுதியும் சேதம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

கள்ளத்தொடர்பு காரணமாக கணவரை மகள் மற்றும் தாயாருடன் சேர்ந்து மனைவியே எரித்து கொலை செய்த சம்பவம் புதன்சந்தை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story