வாந்தி - பேதியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் டேங்கர் லாரி மூலம் குடிநீர் வினியோகம் அதிகாரி தகவல்


வாந்தி - பேதியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் டேங்கர் லாரி மூலம் குடிநீர் வினியோகம் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 12 March 2020 11:30 PM GMT (Updated: 2020-03-13T03:14:52+05:30)

வாந்தி - பேதியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு டேங்கர் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் உமாமகேஸ்வரி கூறினார்.

திருவாரூர்,

திருவாரூர் நகரில் துர்க்காலயா ரோடு, வ.உ.சி. தெரு, கமலாம்பாள் நகர், அவ்வை நகர், அண்ணா நகர், பேட்டை, அம்மாதோப்பு போன்ற பகுதிகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கடந்த சில நாட்களாக திடீரென வாந்தி-பேதி ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட சிலர் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

குடிநீரில் பாதாள சாக்கடை கழிவுநீர் கலந்து வந்ததால் வாந்தி-பேதி ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு மடப்புரத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலமாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. மேலும் பல இடங்களில் பாதாள சாக்கடை இணைப்புகளில் அடைப்பு ஏற்பட்டு கசிவு இருந்து வருகிறது. இதனால் குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு, அதில் பாதாள சாக்கடை கழிவு நீர் கலந்து இருக்கலாம் என அச்சம் நிலவியது. இதனையடுத்து திருவாரூர் நகராட்சி ஆணையர் சங்கரன் தலைமையில் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட பகுதி சென்று குடிநீரை சோதனை செய்தனர். பாதிக்கப்பட்ட குடிநீர் குழாய்களை தோண்டி எடுத்து உடைப்பு உள்ளதா? என அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆய்வு

இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் உமாமகேஸ்வரி, மடப்புரம் நகராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று குடிநீர் குழாய்களை பார்வையிட்டு, உடனடியாக அனைத்து குழாய்களில் ஏதேனும் உடைப்பு ஏற்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்யவும், பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அப்போது அவர் கூறுகையில், குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. குடிநீரை சோதனை நடத்திட ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மடப்புரம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகிக்கப்படும் பகுதிகளில் மட்டுமே பாதிப்பு நிலவி வருவதால் முற்றிலும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த தொட்டியினை முற்றிலும் குளோரினேசன் செய்யப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நாளை (அதாவது இன்று) முதல் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் டேங்கர் லாரி மூலமாக மக்களுக்கு குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்காக நாகை, மயிலாடுதுறை, மன்னார்குடி ஆகிய பகுதிகளில் இருந்து டேங்கர் லாரிகள் வரவழைக்கப்பட்டு, குடிநீர் வினியோகிக்கப்படும். பொதுமக்கள் எந்தவித அச்சம் கொள்ள தேவையில்லை. தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நகராட்சி பொறியாளர் திருமலைவாசன், மேலாளர் முத்துக்குமார் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story