இளம்பெண் திடீர் சாவு: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம், ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு


இளம்பெண் திடீர் சாவு: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம், ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு
x
தினத்தந்தி 14 March 2020 2:45 AM IST (Updated: 14 March 2020 12:27 AM IST)
t-max-icont-min-icon

திடீரென இறந்த இளம்பெண் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு, 

பெருந்துறை அடுத்த நஞ்சனாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பூசப்பன். இவருடைய மனைவி பூங்கொடி. இவர்களுடைய மகள் சத்யா என்கிற சாரதாம்பாள் (வயது 26). இவருக்கும், பெருந்துறை ஆர்.எஸ். குளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த சதீஸ் (28) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சத்யா, தனது தாய் பூங்கொடியிடம் தனது கணவர் சதீஷ் தன்னை துன்புறுத்தி வருவதாக தெரிவித்து உள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை சத்யா தனது தாய் செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். அதில், ‘என்னோட சாவுக்கு என் புருஷன் தான் காரணம்’ என்று எழுதி அனுப்பி இருந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் தன்னுடைய உறவினர்களுடன் சதீஷ் வீட்டுக்கு சென்று பார்த்தபோது சத்யா இறந்து கிடந்தார். அவரது உடலை பார்த்து பூங்கொடி மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

சதீசின் உறவினர்கள் சத்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இதுபற்றி வெள்ளோடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று சத்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை சத்யாவின் உடலை வாங்குவதற்காக உறவினர்கள் பலர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தனர். அப்போது அவர்கள் சத்யாவின் சாவில் மர்ம இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அதன் பின்னர் சத்யாவின் உறவினர்கள் ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு சென்று ஆர்.டி.ஓ. முருகேசனிடம், ‘சத்யாவின் சாவுக்கு காரணமானவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் நாங்கள் உடலை வாங்கிச்செல்வோம்’ என்றனர். அதற்கு ஆர்.டி.ஓ. முருகேசன், ‘இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே நீங்கள் சத்யாவின் உடலை வாங்கிச்செல்லுங்கள்’ என்றனர். அதை ஏற்றுக்கொண்ட அவர்கள் உடலை வாங்கிச்சென்றனர்.

Next Story