கொரோனா தடுப்பு நடவடிக்கை: திருச்சி அரசு மருத்துவமனை நுழைவு வாயில் மூடல்


கொரோனா தடுப்பு நடவடிக்கை: திருச்சி அரசு மருத்துவமனை நுழைவு வாயில் மூடல்
x
தினத்தந்தி 25 March 2020 5:30 AM IST (Updated: 24 March 2020 10:31 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருச்சி அரசு மருத்துவமனையில் பிரதான நுழைவு வாயில் மூடப்பட்டது. நோயாளிகளுடன் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

திருச்சி,

திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக திருச்சி மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் இருந்து நோயாளிகள் அதிக அளவில் வருகை தருவது உண்டு. மேலும் அவர்களுக்கு துணையாக குடும்பத்தினரும், உறவினர்களும் வருவார்கள். இதுதவிர உள்நோயாளிகளாக 300-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவியாக உறவினர்கள் சிலர் உள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி அரசு மருத்துவமனையில் பிரதான நுழைவு வாயில் கதவு நேற்று மூடப்பட்டது. அதன் அருகே அரசு மருத்துவமனை போலீசாரும், மருத்துவமனை ஊழியர்களும் நின்று கொண்டு நோயாளிகளையும், அவர்களுடன் ஒருவரை மட்டுமே மருத்துவமனையின் உள்ளே அனுமதித்தனர். மருத்துவமனை பணியாளர்களை தவிர மற்றவர்களை மருத்துவமனைக்குள் அனுமதிக்கவில்லை.

வாகனங்களுக்கு தடை

நோயாளிகளின் உறவினர்கள் எனக்கூறிக்கொண்டு அதிக அளவில் நின்ற நபர்களை போலீசார் வெளியே அனுப்பினர். மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மருத்துவமனை வட்டாரத்தினர் தெரிவித்தனர். இதேபோல அரசு மருத்துவமனை போலீஸ் நிலையம் அருகே உள்ள நுழைவு வாயிலிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, நோயாளிகளை தவிர மற்ற வெளிநபர்களை மருத்துவமனைக்குள் அனுமதிக்கவில்லை. இதனால் நோயாளிகளின் சிலர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும் போலீசார், தற்போதைய சூழ்நிலையை விளக்கி அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனை நுழைவுவாயிலில் ஊழியர்கள் மற்றும் போலீசார் முக கவசம் அணிந்து பணியாற்றினர். ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் நோயாளிகள் அழைத்து வரப்பட்ட வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படவில்லை. வருகிற 31-ந் தேதி வரை இந்த நடவடிக்கை தொடரும் என ஊழியர்கள் தெரிவித்தனர்.

Next Story