நாமக்கல், ராசிபுரத்தில் காய்கறிகள் விலை ‘கிடுகிடு’ உயர்வு


நாமக்கல், ராசிபுரத்தில் காய்கறிகள் விலை ‘கிடுகிடு’ உயர்வு
x
தினத்தந்தி 24 March 2020 10:30 PM GMT (Updated: 24 March 2020 9:54 PM GMT)

நாமக்கல் மற்றும் ராசிபுரத்தில் காய்கறிகள் விலை ‘கிடுகிடு’ என உயர்ந்தது.

நாமக்கல்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசு நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவை பிறப்பித்து உள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியானது முதல் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க மளிகை மற்றும் காய்கறி கடைகளுக்கு படையெடுக்க தொடங்கினர்.

நாமக்கல் நகரில் வாரச்சந்தைகள் மற்றும் உழவர் சந்தைகள் ஏற்கனவே மூடப்பட்டு விட்டதால், தினசரி சந்தையில் நேற்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதேபோல் சாலையோர காய்கறி கடைகளிலும் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. இதனால் காய்கறிகளின் விலை ‘கிடுகிடு’ என உயர்ந்தது.

விலை உயர்வை பொருட்படுத்தாத பொதுமக்கள் கிடைத்தால் போதும் என காய்கறிகளை வாங்கி சென்றனர்.

ராசிபுரம்

நேற்று முன்தினம் கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி நேற்று கிலோ ரூ.40-க்கும், ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்ட கத்தரி, வெண்டை, கேரட், பீன்ஸ் ஆகியவை நேற்று ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டன. ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் ரூ.80-க்கும், ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயம் ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

144 தடை உத்தரவு காரணமாக ராசிபுரம் தினசரி மார்க்கெட்டில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. காய்கறிகள் அதிக விலைக்கு விற்பனை ஆனது. 1 கிலோ சிறிய வெங்காயம் ரூ.100-க்கும், பெரிய வெங்காயம் 1 கிலோ ரூ.50-க்கும், இஞ்சி ரூ.120-க்கும், பச்சை மிளகாய் ரூ.40-க்கும், 1 கிலோ தேங்காய் ரூ.45-க்கும், பாகற்காய் 1 கிலோ ரூ.60-க்கும் விற்பனை ஆனது. கத்தரிக்காய் 1 கிலோ ரூ.80-க்கும், வெண்டைக்காய் ரூ.60-க்கும், கேரட், பீட்ரூட், பீன்ஸ் ஆகியவை முறையே 1 கிலோ ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

Next Story