மராட்டியத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 500-ஐ நெருங்கியது 11 மத்திய படை வீரர்களுக்கு கொரோனா - பலி 26 ஆக உயர்வு


மராட்டியத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 500-ஐ நெருங்கியது 11 மத்திய படை வீரர்களுக்கு கொரோனா - பலி 26 ஆக உயர்வு
x
தினத்தந்தி 3 April 2020 11:33 PM GMT (Updated: 3 April 2020 11:33 PM GMT)

மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 500-ஐ நெருங்குகிறது. இதில் 11 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலி எண்ணிக்கை 26 ஆக உயர்ந்து உள்ளது.

மும்பை,

நாட்டிலேயே மராட்டியம் தான் கொரோனாவின் கோரப்பிடியில் அதிகம் பேர் சிக்கிய மாநிலமாக உள்ளது.

நாட்டின் நிதி தலைநகரும், மராட்டிய தலைநகருமான மும்பையிலும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. ஆசியாவில் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக கருதப்படும் தாராவியில் கொரோனா தொற்று நுழைந்து இருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதுவரை தாராவியை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் பாதிக்கப்பட்ட துணிக்கடைக்காரர் ஒருவர் இறந்து விட்டார். மேலும் டாக்டர் மற்றும் மாநகராட்சி துப்புரவு தொழிலாளி என 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மத்திய படை வீரர்கள்

இந்த நிலையில் நவிமும்பை, பன்வெல் பகுதியில் முகாமில் தங்கி உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் (சி.ஐ.எஸ்.எப்.) சிலருக்கு கொரோனா அறிகுறி இருந்தது. மருத்துவ பரிசோதனையில் அவர்கள் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர்கள் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்கள். விமான நிலைய பணியின்போது வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளிடம் இருந்து இந்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக கருதப்படுகிறது.

இதையடுத்து நவிமும்பை மாநகராட்சி, மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் தங்கியிருந்த முகாமை சீல் வைத்தது. மேலும் முகாமில் தங்கியிருந்த வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கிராமத்துக்கும் தாவியது

இதுதவிர மும்பையில் பிரபல ஓட்டல் ஒன்றில் பணியாற்றி வந்த வாலிபர் ஒருவர் தனது சொந்த ஊரான உஸ்மனாபாத் மாவட்டம் லோஹ்ரா தாலுகாவில் உள்ள தனுரி கிராமத்துக்கு சென்று இருந்தார். அங்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதன் மூலம் மராட்டியத்தில் நகரில் இருந்து கிராமத்துக்குள்ளும் கொரோனா தாவி உள்ளது. மராட்டியத்தை பொருத்தவரை கொரோனா சமூக தொற்றாக மாறி உள்ளது.

500-ஐ நெருங்கியது

இந்த நிலையில் நேற்று மராட்டியம் முழுவதும் மேலும் 67 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 490 ஆக உயர்ந்து, 500-ஐ நெருங்கியது.

புதிய கொரோனா நோயாளிகளில் மும்பையில் மட்டும் 43 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் புனேயில் 9, நவிமும்பையில் 8, அகமது நகர் 3 மற்றும் கல்யாண், பால்கர், வாசிம், ரத்னகிரியில் தலா ஒருவர் என புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் கொரோனாவினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை நேற்று முன்தினம் 20 ஆக இருந்தது. இதில் நேற்று மட்டும் மும்பையில் 2 பேர் உள்பட 6 பேர் பலியானார்கள். இதன் மூலம் மாநிலத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்து உள்ளது.

கொரோனாவின் கோரப்பசியில் இருந்து தப்பிக்க மராட்டிய மக்கள் விழிபிதுங்கி பரிதவித்து வருகின்றனர்.

Next Story