ஊரடங்கை மீறி வெளியில் வந்ததாக வாகன ஓட்டிகளிடம் பணம்-செல்போன் பறித்த போலி போலீஸ்காரர் கைது


ஊரடங்கை மீறி வெளியில் வந்ததாக வாகன ஓட்டிகளிடம் பணம்-செல்போன் பறித்த போலி போலீஸ்காரர் கைது
x
தினத்தந்தி 10 April 2020 5:15 AM IST (Updated: 9 April 2020 11:48 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கை மீறி வெளியில் வந்ததாக வாகன ஓட்டிகளிடம் பணம்-செல்போன் பறித்த போலி போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை,

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த வெள்ளலூரை சேர்ந்த சுரேஷ்கண்ணன் (வயது48) நேற்று முன்தினம் சிவகங்கையை அடுத்த கீழப்பூங்குடி கிராமத்தில் உள்ள தன்னுடைய சகோதரி வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். பெருமாள்பட்டி என்ற பகுதியில் வந்துகொண்டிருந்த போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் சுரேஷ் கண்ணனை நிறுத்தினார். அவர், மதகுபட்டி போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ் என கூறி, ஊரடங்கை உத்தரவை மீறி ஏன் வெளியே வந்தாய்? என மிரட்டியுள்ளார். மேலும் அவரிடம் இருந்த ரூ.7,500-ஐ பறித்துக்கொண்டு மதகுபட்டி போலீஸ் நிலையத்தில் வந்து வாங்கிக்கொள்ளும்படி கூறியதாக தெரிகிறது.

பின்னர் அந்த வழியில் மோட்டார் சைக்கிளில் வந்த மாங்குடி கிராமத்தை சேர்ந்த இளையராஜா (30) என்பவரை மிரட்டி அவரிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டு அவரையும் மாலையில் மதகுபட்டி போலீஸ் நிலையத்திற்கு வந்து பெற்று கொள்ளுமாறு கூறிச் சென்றார். தொடர்ந்து சிவகங்கையை அடுத்த சாலூர் கிராமத்திற்கு வந்து அங்கு காய்கறி கடை வைத்திருந்த அல்லியம்மாள் என்ற பெண்ணிடம் தடையை மீறி கடை வைத்ததாக கூறி ரூ.5 ஆயிரத்தை பறித்து கொண்டு அந்த நபர் சென்றதாகவும் தெரியவருகிறது.

இதையடுத்து நேற்று முன்தினம் மாலையில் பணத்தை கேட்டு சுரேஷ்கண்ணனும், செல்போனை கேட்டு இளையராஜாவும் மதகுபட்டி போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். மேலும் அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித்திடம் நடந்த விவரத்தை கூறினார்கள்.

விசாரணையில் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசார் யாரும் அவ்வாறு பணம், செல்போனை பறிக்கவில்லை எனவும், போலீஸ் அல்லாத மர்ம நபர் ஒருவர் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைதொடர்ந்து போலி போலீஸ்காரரை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் உத்தரவின் பேரில், சிவகங்கை தாலுகா இன்ஸ்பெக்டர் சீராளன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரஞ்சித், அன்சாரி உசேன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

விசாரணையில் போலீஸ்காரர் போல் நடித்து பணம் பறித்தது சிவகங்கையை அடுத்த கூட்டுறவுபட்டியை சேர்ந்த அருண்பிரகாஷ் (32) என்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து போலீசார் அருண்பிரகாசை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அருண்பிரகாஷ் கடந்த பிப்ரவரி மாதம் கீழப்பூங்குடி கிராமத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்திருந்த உறங்கான்பட்டியை சேர்ந்த கண்ணன் என்பவரின் மோட்டார் சைக்கிளை திருடி சென்றுள்ளார்.

இது தொடர்பாக கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் மதகுபட்டி போலீசார் ஏற்கனவே வழக்கு பதிவு செய்துள்ளனர். பின்னர் அந்த மோட்டார் சைக்கிளில் போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு போலீஸ் போல் நடித்து பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அருண்பிரகாசிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Next Story