கொரோனா வைரசை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள்
கொரோனா வைரசை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நம்பியூர்,
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் நம்பியூரில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியதாவது:–
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நமது மாவட்டத்தில் சமூக பரவல் ஏற்படவில்லை. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 179 தனியார் நிறுவனங்களில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு தங்குமிடம், உணவு, மருத்துவம், சம்பளம் மற்றும் இதர வசதிகள் அனைத்தும் மிக சிறப்பான முறையில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 82 மொத்த மளிகை விற்பனையாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நகர் பகுதியில் வசிக்கும் மக்கள் இருசக்கர வாகனத்தை மட்டும் பயன்படுத்த வேண்டும். அத்தியாவசிய தேவை கருதி பேக்கரிகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் எந்த ஒரு இடத்திலும் பட்டினி சாவு நடந்து விடக்கூடாது என்பதில் முழு கவனத்துடன் செயல்பட்டு வருகிறோம். மலைப்பகுதியான கடம்பூர், ஆசனூர், பர்கூர், கர்கேண்டி, உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டு அங்குள்ள பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
மாவட்ட போலீஸ்துறை சார்பில் 12 இடங்களில் உணவு தயாரிக்கப்பட்டு போலீஸ்காரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஹலோ சீனியர்ஸ் திட்டம் மூலம் 60 வயதை கடந்தவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அதன்மூலம் அவர்கள் கேட்கும் மருந்து பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் அவர்கள் வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பறக்கும் கேமரா மூலம் மனிதர்கள் நடமாட்டம் உள்ளதா? என்பதை கண்காணித்து வருகிறோம்.
அத்தியாவசிய தேவைகள், அவசர மருத்துவ பணிகள், இறப்பு, திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளுக்கு அந்தந்த போலீஸ் நிலையத்தை அணுகி அதற்கான அனுமதி உத்தரவை பெற்றுக்கொள்ளலாம். ஈரோடு மாநகராட்சி பகுதியில் 60 நடமாடும் காய்கறி கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த பொதுமக்கள் தொடர்ந்து எங்களுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கூறினார்.
Related Tags :
Next Story