கொரோனா ஊரடங்கு உத்தரவால் சிவகங்கை மாவட்டத்தில் விவசாய பணிகள் பாதிப்பு
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் விவசாய பணிக்கு வேலையாட்கள் கிடைக்கவில்லை. எனவே சிவகங்கை மாவட்டத்தில் தற்போது விவசாய பணிகள் முற்றிலும் முடங்கிய நிலையில் உள்ளது.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் ஆண்டுதோறும் பெய்ய வேண்டிய பருவ மழை பெய்து கண்மாய்கள் நிரம்பினால் மட்டும் தான் விவசாயம் என்ற நிலை உள்ளது. கடந்த ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள், ஊருணிகள் உள்ளிட்ட நீர்நிலைகள், மாவட்ட நிர்வாகம் சார்பில் தூர்வாரப்பட்டு மராமத்து பணிகள் செய்யப்பட்டதால், பருவ மழையால் நிரம்பின.
இதையடுத்து பல ஆண்டுகளாக முடங்கி கிடந்த விவசாய பணிகள் நடைபெற்று, ஓரளவுக்கு விவசாயிகளுக்கு கை கொடுத்தது. இதுதவிர கிணற்று பாசனம் மூலம் விவசாயிகள் தற்போது 2-ம் போக விவசாய பணிகளை தொடங்க உள்ள நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், வேலையாட்கள் கிடைக்காமல் விவசாய பணிகளை தொடங்க முடியவில்லை.
வருகிற 20-ந் தேதிக்கு பின்பு அரசு விவசாய பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளதால், அதன் பின்பு கிணற்று பாசனத்தின் மூலம் விவசாய பணிகளை தொடங்கலாம் என்று விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
இந்த ஊரடங்கு காரணத்தினால் வீட்டிற்குள் முடங்கி போன விவசாய தொழிலாளர்கள், விவசாய பணிக்கு வர அதிக சம்பளம் தர வேண்டும் என்று கேட்கின்றனர். இதனால் செய்வதறியாது விவசாயிகள் திகைத்து வருகின்றனர். இதுகுறித்து காரைக்குடி அருகே சாக்கோட்டை பகுதியை சேர்ந்த விவசாயி கூறியதாவது:- ஆண்டுதோறும் கிணற்று பாசனத்தில் விவசாய தொழிலை மேற்கொள்ள இந்த பகுதியை சேர்ந்த விவசாய தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து, விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலைக்கு ஆட்கள் கிடைக்காததால், விவசாயம் செய்ய முடியாமல் இருந்து வருகிறேன். ஒரு சில கிணற்று பாசன விவசாயிகள், அதிகமாக பெண் தொழிலாளர்களுக்கு ரூ.400 வரை சம்பளம் கொடுத்து வேலைக்கு அழைத்து வந்து விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அவ்வாறு வந்தால் கூட குறைந்தளவு தான் வேலையாட்களை அழைத்து வரமுடிகிறது. தற்போது இந்த ஊரடங்கு உத்தரவில் வருகிற 20-ந் தேதிக்கு பின்னர் தான் விவசாய பணிகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது என்ற தகவல் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை தரும் வகையில் உள்ளது. எனவே வருகிற 20-ந்தேதிக்கு பின்னர் விவசாய பணிகளை தொடங்கலாம் என்று முடிவு செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story