சேலத்தில் திருமணம் செய்வதாக கூறி காதலியை ஏமாற்றிய என்ஜினீயர் கைது
சேலத்தில், திருமணம் செய்வதாக கூறி காதலியை ஏமாற்றிய என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.
சூரமங்கலம்,
சேலம் பழைய சூரமங்கலம் கபிலர் தெருவை சேர்ந்தவர் விஷ்ணுகுமரன் (வயது 24), என்ஜினீயரான இவர் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பழுதாகும் எந்திரங்களை சர்வீஸ் செய்யும் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் விஷ்ணுகுமரனுக்கும், கந்தம்பட்டியை சேர்ந்த எம்.காம் பட்டதாரியான சுபத்ரா(23) என்ற இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் இது காதலாக மாறியது. இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே விஷ்ணுகுமரனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய அவருடைய குடும்பத்தினர் ஏற்பாடு செய்தனர். இதற்கு அவரும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி தெரியவந்ததும் சுபத்ரா தனது காதலர் விஷ்ணுகுமரனை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தினார். இதற்கு அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுபத்ரா சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதில், திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி தன்னை காதலித்து ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி என்ஜினீயரான விஷ்ணுகுமரனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story