அந்தியூர், ஈரோட்டில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை; வீட்டின் மேற்கூரை பறந்தது


அந்தியூர், ஈரோட்டில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை; வீட்டின் மேற்கூரை பறந்தது
x
தினத்தந்தி 27 April 2020 4:15 AM IST (Updated: 27 April 2020 2:12 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர், ஈரோட்டில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. அந்தியூரில் வீட்டின் மேற்கூரை பறந்து சென்று விழுந்தது.

அந்தியூர், 

கோடை காலம் என்பதால் ஈரோடு மாவட்டத்தில் வெயில் கொளுத்தி வருகிறது. ஊரடங்கு உத்தரவால் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கும் பொதுமக்கள் வெப்ப காற்றால் அவதிப்பட்டு வருகிறார்கள். எனினும் அவ்வப்போது மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்து பொதுமக்களை குளிர்வித்து வருகிறது. இந்த நிலையில் அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல், பர்கூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு காற்றுடன் கூடிய லேசான மழை பெய்தது.

இதேபோல் எண்ணமங்கலம், கோவிலூர், வரட்டுப்பள்ளம் அணை பகுதியிலும் மழை பெய்தது. நேற்று காலையும் அந்தியூரில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. இந்த நிலையில் மதியம் 12 மணி முதல் முதல் 12.30 மணி வரை சுமார் ½ மணி நேரம் பலத்த மழை பெய்தது.

சூறாவளிக்காற்றால் பர்கூர் மலைப்பாதையில் 5 இடங்களில் மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுந்தன. இதுபற்றி அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறையினர் அங்கு சென்று உடனடியாக மரங்களை அப்புறப்படுத்தினர். மேலும் ஒரு வீட்டின் மேற்கூரை பறந்து விழுந்தது. வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

எண்ணமங்கலம் பகுதியில் தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த சில வாழை மரங்களும் முறிந்து விழுந்துள்ளன. அந்தியூர் புதுப்பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிடத்தின் முன்பு போடப்பட்ட பெரிய கூரை ஒன்று காற்றுக்கு தாக்கு பிடிக்காமல் கீழே விழுந்தது.

பவானி

வேம்பத்தி முருகன்காட்டுப்புதூர் கிராமத்தில் வீசிய சூறாவளிக்காற்றில் வீரப்பன் என்பவரது வீட்டின் தகரத்தினால் ஆன ஓடு பறந்து அருகே உள்ள முனியப்பனின் வீட்டின் ஓலை குடிசையின் மீது விழுந்தது. இதில் முனியப்பனின் வீடு சேதம் அடைந்தது. இதற்கிடையே சத்தம் கேட்டு வீட்டில் இருந்த அனைவரும் வெளியே ஓடி வந்து உயிர் தப்பினர். இதுபற்றி அறிந்ததும் வேம்பத்தி கிராம நிர்வாக அதிகாரி பூபதி அங்கு சென்று சேதமடைந்த வீட்டை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட முனியப்பனுக்கு ஆறுதல் கூறினார்.

பவானியில் மதியம் 12.50 மணி முதல் 1.30 மணி வரை சுமார் 35 நிமிடம் பலத்த மழை பெய்தது. இதேபோல் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் லேசான தூறலும், காற்று வீசுவதுமாக இருந்தது.

ஈரோடு

இதேபோல் ஈரோட்டில் நேற்று பகல் 11 மணிஅளவில் திடீரென வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் மாநகர் பகுதியே இருள் சூழ்ந்து காணப்பட்டது. அப்போது சூறாவளி காற்று பலமாக வீசியது. இந்த காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் பல்வேறு இடங்களில் விளம்பர தட்டிகள் பறந்தன. மரங்கள் வேகமாக அசைந்தன. ஈரோடு சூளை பஸ் நிறுத்தத்தில் வைக்கப்பட்டு இருந்த தடுப்புகள் (பேரிகார்டர்) கீழே விழுந்தன.

சூறாவளி காற்றை தொடர்ந்து பலத்த மழை பொழிய தொடங்கியது. மழை பெய்ததும் காற்றின் வேகம் குறைந்தது. சுமார் 1½ மணிநேரம் மழை கொட்டியது. மழை பெய்யும்போது குளிர்ந்த காற்று வீசியதால், வீடுகளிலேயே முடங்கிய பொதுமக்கள் திடீர் உற்சாகம் அடைந்தனர். அவர்கள் வீடுகளில் இருந்தபடியே மழையின் அழகை ரசித்தனர். பல நாட்களுக்கு பிறகு பெய்த மழையால், ஈரோடு மாநகரமே குளிர்ந்தது.

இதனால் சில நாட்களாக அனல் காற்றை மட்டுமே அனுபவித்து வந்த பொதுமக்களுக்கு, பகல் நேரத்தில் பெய்த மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story