மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே சேலத்துக்குள் அனுமதி: ஆணையாளர் சதீஷ் தகவல்
வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வருபவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே சேலத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
சேலம்,
வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வருபவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே சேலத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக மாநகரின் அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிப்பு பணிகளும், பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வரும் இடங்களில் நெரிசலை தவிர்க்கும் வகையில் தினமும் அனைத்து பகுதிகளுக்கும் வீடு, வீடாக சென்று மருந்து, காய்கறிகள், மளிகை பொருட்கள் மற்றும் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் 80 வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, தொடர் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் மாநகராட்சி எல்லைப்பகுதி மற்றும் மாநகர பகுதிகளில் 18-க்கும் மேற்பட்ட சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் மற்றும் சேலத்தை வசிப்பிடமாக கொண்டு பணி நிமித்தமாக வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் தங்கியிருந்து வருபவர்களும் மாநகராட்சி எல்லை பகுதிகளில் உள்ள போலீசாரின் சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு, அவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்படும். பின்னர் கருப்பூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் மையத்தில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்படுவார்கள். பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்பட்ட பின்னரே, சேலத்துக்குள் நுழைய அவர்கள் அனுமதிக்கப்படுவர்.
எனவே கொரோனா தொற்று தடுப்பு பணிகளுக்காக மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஒத்துழைப்பு வழங்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story